"அண்ணாமலை சிறப்பாகவே செயல்படுகிறார்... அதனால் நான் தொண்டராக பணியாற்றுவதில் பெருமை"- தமிழிசை

தமிழ்நாட்டில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா திருக்கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்ட பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தொடர்ந்து நடைபெற்ற இந்து சமயமாநாடு துவக்கவிழா நிகழ்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை செளந்தரராஜன், “தமிழ்நாட்டில் தொகுதி சீரமைப்பில் தொகுதி கூடுமே தவிர குறையாது. பிரதமர் கூறிய பிறகும் தமிழகத்தில் நாடகம் நடக்கிறது. தமிழக மக்கள் ஒருபோதும் வஞ்சிக்கப்பட்ட மாட்டார்கள். இவர்களைவிட பாரத பிரதமர் தமிழக மக்கள் மீது அன்பு வைத்து இருக்கிறார். திமுக அரசால் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளது.
நிறைவேற்றாத வாக்குறுதியை மறைக்கவே அனைத்து கட்சி கூட்டம். ஆகவே கூட்டம் தேவை இல்லை என மாநில தலைவர் அண்ணாமலை புறக்கணித்து உள்ளார். இவர்கள் தமிழகம் முழுக்க இரு மொழி கொள்கை என்கின்றனர். ஆனால் இவர்களது பிள்ளை தனியார் பள்ளியில் படிக்கின்றனர். ஆகவே மும்மொழி கல்வியை ஆதரித்து கையெழுத்து இயக்கம். தமிழகம் முழுக்க நடக்க உள்ளது. தமிழகத்தில் பாஜக தொண்டனாக எப்போதும் பணியாற்ற தயாராக இருக்கிறேன். பாஜக தலைவர் சிறப்பாக செயலாற்றி வருகிறார். ஆகையால் தொண்டனாக எப்போதும் பணியாற்றுவேன், பெருமை படுகிறேன். ஆளுநராக இருந்து மக்கள் பணிக்காகவே பதவியை ராஜினாமா செய்தேன். தமிழ்நாட்டில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும்” என்றார்.