"ஃபாசிச பாஜகவை ஆட்சியதிகாரப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும்" - திருமாவளவன் பேச்சு!!

 
tn

கோட்பாட்டு யுத்தத்தில், அரசியலதிகார யுத்தத்தில் இறுதியில் சனநாயகமே வெல்ல வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

"வெல்லும் சனநாயகம் மாநாட்டில்" விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தேசிய தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தலைவர் பெருமக்களே,  "என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே அனைவருக்கும் வணக்கம்.  நமது கட்சி ஒருங்கிணைத்துள்ள இந்த "வெல்லும் சனநாயகம் மாநாடு" வெற்றிகரமாக நடந்தேறுவதற்கு கடந்த சில மாதங்களாகத் தீவிரமாகக்  களப்பணியாற்றிய கட்சியின் மாவட்டச்செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர்  நிர்வாகிகள், மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து தோழர்களுக்கும் என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகள் யாவருக்கும் முதலில் எனது மனம்நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
இந்த மாநாடு நமது இயக்க வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் ஒரு மகத்தான நிகழ்வாகும். கடந்த பத்தாண்டுகளாக இந்திய நாட்டைச் சூழ்ந்துள்ள பேராபத்திலிருந்து மக்களையும் மக்களாட்சி கோட்பாடான சனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டிய கடும் நெருக்கடியான சூழலில் இம்மாநாட்டை நாம் ஒருங்கிணைத்துள்ளோம். 
இங்கே தீவிரமடைந்துள்ள வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கும் இடதுசாரி முற்போக்கு சக்திகளுக்கும் இடையிலான பெரும்போரில் ஃபாசிச சனாதன மதவாத சக்திகளை வீழ்த்தி, இறுதியில் சனநாயகமே வெல்லும் என உரத்து முழங்கும் வரலாற்றுப் பெருநிகழ்வே இந்த எழுச்சிகரமான மாநாடாகும். 

thiruma
நாட்டுக்குப் பேராபத்து எனில், சனநாயகத்துக்குப் பேராபத்து என்பதாகும். சனநாயகத்துக்குப் பேராபத்து எனில், அரசமைப்புச் சட்டத்துக்குப் பேராபத்து என்பதாகும்.   அதாவது, புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவஹர்லால் நேரு போன்ற மாபெரும் ஆளுமைகளால் வரையறுக்கப்பட்டு, அரசியல் நிர்ணய சபையினால் ஏற்கப்பட்ட அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் முன்மொழியப்பட்டுள்ள அடிப்படைக்கூறுகளான நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் பன்மைத்துவம், மதசார்பின்மை, கூட்டாட்சி ஆகிய சனநாயக விழுமியங்களுக்குப் பேராபத்து என்பதாகும்.
ஒட்டுமொத்தத்தில் சனநாயகம் என்னும் மகத்தான கருத்தியலைச் சிதைத்து அழித்தொழிக்க ஃபாசிச சக்திகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இங்கே ஃபாசிச பிற்போக்கு சக்திகள் சனநாயக முகமூடிகளை அணிந்துகொண்டு அப்பாவி மக்களை ஏய்க்கும் நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி வருகின்றன. அவர்கள் தங்களை பாஜக என்னும் அரசியல் கட்சியாக அடையாளப் படுத்திக்கொண்டு ஆர்எஸ்எஸ் என்னும் அமைப்பின் அடிப்படைவாத செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், சனாதன் சன்ஸ்தா போன்ற சங் பரிவார் அமைப்புகளின் கொள்கை- கோட்பாடுகளைப் பரப்புகிற- செயல்படுத்துகிற பணிகளைச் செவ்வனே ஆற்றிவருகின்றனர்.பாஜகவினர் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக வெளிப்படையான எந்தவொரு  விமர்சனங்களையும் செய்யாமல், அதனை நீர்த்துப்போகச் செய்கிற அனைத்துச் சதிவேலைகளையும் ஒவ்வொன்றாக அரங்கேற்றி  வருகின்றனர். ஆட்சியதிகாரத்தைப் பயன்படுத்தி நீதித்துறை, நிர்வாகத்துறை, புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்ற அனைத்து சனநாயக அமைப்புகளையும் தமது கட்டுக்குள் வைத்துக்கொண்டு தங்களின் கனவுத்திட்டங்கள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றி வருகின்றனர்.

thiruma
நாடாளுமன்ற சனநாயகத்தைப் பயன்படுத்தி தேர்தல் வழியாக ஆட்சியதிகார பீடத்தைக் கைப்பற்றி, சனநாயகத்தைச் சிதைத்து முழு முற்றான ஃபாசிசத்தை நோக்கி நாட்டை இழுத்துச்செல்லும் மிகவும் கேடான முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  ஒரே நாடு; ஒரே கலாச்சாரம்  ஒரே நாடு ; ஒரே தேர்தல் போன்ற இவர்களின் கொள்கை முழக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்றான பன்மைத்துவம் என்கின்ற சனநாயக விழுமியத்தைச் சிதைக்கிற முயற்சியாகும்.  ஒரே நாடு - ஒரே மதம்; ஒரே மொழி; ஒரே கட்சி; ஒரே தேர்தல்; ஒரே ஆட்சி என யாவற்றையும் ஒற்றை நிலையாக மாற்றும் ஃபாசிச போக்கில் இவர்கள் வேகம் காட்டுகின்றனர். இது அரசமைப்புச் சட்டத்தை நீர்த்துப்போகச்செய்யும் சதித் திட்டமே ஆகும்.  அடுத்து, பெரும்பான்மைவாதம் என்னும் சனநாயகக் கூறினைத் தங்களின் ஃபாசிச அரசியலுக்கான கூறாகப் பயன்படுத்துகின்றனர். மதத்தின் பெயரால் பெரும்பான்மைவாத்தைக் கூர்தீட்டிப் சிறுபான்மை மதங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைத்து பெரும்பான்மை மதத்தினரின் ஒற்றுமை என்னும் பெயரில் மதவெறியைத் திணிக்கின்றனர். குறிப்பாக, இசுலாமியர், கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களைத் திட்டமிட்டு அரங்கேற்றி வருகின்றனர்.  மத அடிப்படையில் பெரும்பான்மைவாதத்தை நிலைநாட்டுவதன்மூலம் அரசின் மதசார்பின்மையைச் சிதைத்து, பெரும்பான்மை மதத்தின் சார்புநிலையை நிறுவுவதே அவர்களின் நோக்கம். அதாவது மதசார்புள்ள அரசு மற்றும் அரசுக்கும் ஒரு மதம் என அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறான மதசார்பின்மையை நீர்த்துப்போகச் செய்வதில் முனைப்பாகவுள்ளனர். 


அடுத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறிப்பது, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசங்களாக சிதைத்தது, மொழி- இனவுரிமைகளை நசுக்குவது, இந்தி மற்றும் சமற்கிருத மொழிகளைப் பிறமொழி பேசும் மாநில மக்களின்மீது திணிப்பது இணைப்புமொழியான ஆங்கிலத்தை அப்புறப்படுத்தி, மறைமுகமாக இந்தியை ஏற்கவைப்பது, கல்வியையும் மாநில அதிகாரத்திலிருந்து விலக்கி ஆக்கிரமிப்பு மற்றும் ஆதிக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளின் மூலம் கூட்டாட்சி என்னும் அடிப்படைக் கூறினைச் சிதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 
அத்துடன், நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய சனநாயக விழுமியங்களை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அவற்றைச் சிதைக்கும் அனைத்து வேலைகளையும் செய்துவருகின்றனர். பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்னும் பெயரில் சமூகநீதியின் அடிப்படையைத் தகர்த்தது அதற்கு ஒரு சான்றாகும். சமூகநீதியை அழித்தொழிப்பதன் மூலம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றை மதிப்பிழக்கச் செய்வதே இவர்களின் நோக்கமாகும். சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மக்களைப் பிளவுபடுத்துவதில் அதிதீவிரமாக செயலாற்றி வருகின்றனர். உழைக்கும் அப்பாவிமக்களை எந்நேரமும் சாதி, மதம், கடவுள், கோவில், பண்டிகை உள்ளிட்ட கலாச்சார தளத்திலேயே கட்டிப்போட்டு அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதிலேயே குறியாகவுள்ளனர். 

Thiruma
அதன் உச்சமாக அவர்கள் கையிலெடுத்த பேராயுதம் தான் இராமர், ஜெய்ஸ்ரீராம் ஆகிய மந்திரச்சொற்களாகும். 
கல்வி நிறுவனங்களைப் பெருக்குவதைவிட கோவில்களைப் பெருக்குவதில்தான் ஆர்வம் காட்டுகின்றனர். பொதுத்துறைகளை உருவாக்கிட முனையாமல், ஏற்கனவே இயங்கிய பொதுத்துறைகளைத் தனியார்மயப்படுத்துவதையே சாதனையாகக் கருதுகின்றனர்.ஏழை எளிய மக்களை வறுமையிலிருந்து மீட்பதைவிட அதானி அம்பானி போன்ற கார்ப்பரேட் பெருமுதலாளிகளை- தரகு முதலாளிகளை உலகப் பெரும் செல்வந்தர்களாக ஆக்குவதையே தமது கடமையாகக் கருதுகின்றனர். விவசாயிகளையும் தொழிலாளர்களையும் நசுக்குகிற சட்டங்களைக் கொண்டுவந்து தமது பெரு முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தினர். ஜிஎஸ்டி வரி விதிப்பின்மூலம் சிறு, குறு தொழில் முதலீட்டாளர்களை வீதியில் நிறுத்தியுள்ளனர்.  இந்த ஃபாசிச பாஜக ஆட்சியில், கடந்த பத்தாண்டு காலத்தில் பாதிக்கப்படாத எளிய உழைக்கும் மக்கள் யாருமில்லை என்கிற வகையில் பேரவலம் நிலவுகிறது.  பொருளாதார தளத்தில் கார்ப்பரேட்மயமாதலும் ; சமூகம், கலாச்சாரம் ஆகிய தளங்களில் சனாதனமயமாதலும் அரசியல் இவை இரண்டும் மேலோங்கும் வகையில் ஃபாசிசமயமாதலும் இவர்களின் ஆட்சியில் கோலோச்சுகின்றன. 

thiruma
இதனால், ஒட்டுமொத்த நாட்டின் மக்களுக்கும், குறிப்பாக, விளிம்புநிலை மக்கள் யாவருக்கும், சமூக- மத நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமை - ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கும், அரசமைப்புச் சட்டம் வரையறுத்துள்ள சனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளுக்கும், ஒட்டுமொத்தத்தில் சனநாயகம் என்னும் மகத்தான கோட்பாட்டுக்கும் இந்த ஃபாசிச சனாதன பாஜக மற்றும் சங்பரிவார்களால் பேராபத்து நீடிக்கிறது. எனவே,  இந்த கோட்பாட்டு யுத்தத்தில், அரசியலதிகார யுத்தத்தில் இறுதியில் சனநாயகமே வெல்ல வேண்டும். 
அதற்கு நடைபெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில்   ஃபாசிச பாஜகவை ஆட்சியதிகாரப் பீடத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும். குறிப்பாக, அப்பாவி உழைக்கும் இந்துப் பெரும்பான்மை மக்கள், சாதி- மதம்- கடவுள் ஆகியவற்றின் பெயரில் பாஜகவும் சங் பரிவார்களும் செய்கிற மாய்மால மோசடி அரசியலுக்கும் இந்தமுறையும் ஏமாறாமல்- இரையாகாமல் விழிப்பாக இருந்து அவர்களை இனி எக்காலத்திலும் எழவேமுடியாது என்கிற வகையில் வீழ்த்திட முன்வர வேண்டும்.  இந்தியா கூட்டணிக்கு மகத்தான வெற்றியைத் தர வேண்டும் என்றார்.