‘குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ குற்றப் பத்திரிக்கையை வெளியிட்ட பாஜக
தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ஆளும் திமுக அரசுக்கு எதிராக ‘குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ என்ற தலைப்பில் குற்றப் பத்திரிக்கையை இன்று மாலை 31.03.2026 மத்திய அமைச்சரும் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, தேசிய மகளிர் அணித் தலைவி வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

‘குற்றவாளி கூண்டில் ஸ்டாலின் அரசு’ என்ற தலைப்பில் ஐந்து வருட ஆட்சி காலத்தில் திமுக அரசாங்கத்தில் நடந்த குற்றங்களை பல்வேறு தலைப்புகளில் பட்டியலிட்டு குற்றஞ்சாாட்டியுள்ளது பாஜக. பெண்களுக்கு எதிரான திமுக அரசு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் தலைவிரித்தாடும் போதை கலாச்சாரம், பட்டியல் சமூகத்தினருக்கு எதிரான கட்சி திமுக, 5 ஆண்டு கால திமுக கொள்ளையர்களின் ஆட்சி, நிறைவேற்றாத திமுக தேர்தல் வாக்குறுதிகள், நிதி நிர்வாகத்தை சீரழித்த திமுக, தலைவிரித்தாடும் ஊழல் மற்றும் இந்து விரோதம் என்ற 9 தலைப்புகளில் பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இந்த குற்றப் பத்திரிகை தயாரிப்பு குழுவில் இராம ஸ்ரீனிவாசன் துணைத் தலைவர், கராத்தே தியாகராஜன் மாநிலச் செயலாளர் பொறுப்பாளர்களாகவும், காயத்ரி சுரேஷ் துணை பொறுப்பாளராகவும், ம. வெங்கடேசன் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து இந்த குற்றப்பத்திரிக்கையை தொகுத்துள்ளனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் அதிகரித்து வரும் பாலியல் அத்துமீறல் வழக்குகள், திமுக நிர்வாகிகள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள், திமுக ஆட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள 32 லாக்கப் மரணங்கள், 2 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை நடந்துள்ள பாலியல் வன்முறை குற்றங்கள், திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டிலேயே 51.42% உயர்ந்துள்ள போதைப் பொருள் தொடர்பான குற்றங்கள், ஜாஃபர் சாதிக், சர்பராஸ் நவாஸ் போன்ற போதைப் பொருள் கடத்தல் ஆசாமிகளுக்கு கட்சியில் பதவி கொடுத்து அழகு பார்த்த திமுக அரசு, வேங்கை வயல் அநீதி, நாங்குநேரி பள்ளி மாணவன் தாக்குதல், தூத்துக்குடி மென்பொறியாளர் கவின் செல்வ கணேஷ் மரணம் போன்ற பட்டியல் இனத்தவருக்கு எதிரான அநீதிகள், திமுக அரசின் திறனற்ற திடக்கழிவு மேலாண்மை, அதிமுக ஆட்சி காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி ஆகிய திட்டங்களை கிடப்பில் போட்டது, ஏழை எளிய பெண்களுக்கு பெரும் உதவியாக இருந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்தது, பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் மாதாமாதம் மின் கட்டணம் கணக்கெடுப்பு, முதல் கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து, பெண்களுக்கான இட ஒதுக்கீடு 30 லிருந்து 40% போன்ற நிறைவேற்றாத வாக்குறுதிகள், திமுக ஆட்சியில் உயர்ந்துள்ள வருவாய் பற்றாக்குறை, குறைந்துள்ள மூலதன முதலீடு, அதிகரித்துள்ள மொத்த கடன், ஜிஎஸ்டி இழப்பீட்டில் பணம் பெறவில்லை என்ற பொய், திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறையில் மட்டுமே பல லட்சம் கோடி ஊழல்கள், டாஸ்மாக் துறையில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான ஊழல் போன்ற ஊழல் குற்றச்சாட்டுகள், சனாதனத்தை ஹெச்ஐவி தொழுநோய் என்று கூறியது, திருப்பரங்குன்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் செயல்படுத்தாதது போன்ற ஹிந்து விரோத குற்றங்களையும் உள்ளிட்ட குற்றங்களை பல்வேறு தலைப்புகளில் பட்டியலிட்டுள்ளது பாஜக அரசு.

