"உங்களுக்கு இந்த உல்லாசப்பயணம் தேவைதானா?"... ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி
கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாத ஒருவர், வானம் ஏறி வைகுண்டம் போக அடம்பிடித்த கதை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை பாஜக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ““முதலீடுகளை ஈர்க்கிறேன், வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருகிறேன்” என்று வருடாவருடம் மக்கள் வரிப்பணத்தில் குடும்பமாக வெளிநாடுகளுக்கு இன்பச்சுற்றுலா செல்லும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே,
தமிழக மக்கள் சார்பாக உங்களிடம் சில கேள்விகள்;
🫵🏻கடந்த 3 ஆண்டுகளில், துபாய், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த நீங்கள்,
இதுவரை எத்தனை கோடி முதலீடுகளை வாங்கி வந்துள்ளீர்கள்?
எத்தனை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது?
எத்தனை ஆயிரம் வேலைவாய்ப்புகள் உற்பத்தியாகின? போன்ற விவரங்கள் அடங்கிய “வெள்ளை அறிக்கையை” வெளியிடும் திராணி இருக்கிறதா❓
🫵🏻தமிழகத்தையே உலுக்கிய “ஒரத்தநாடு கூட்டுப்பாலியல்” சம்பவத்தின் தாக்கமே இன்னும் குறையாத நிலையில், அதற்குள் அடுத்த சுற்றுலாவிற்கு திட்டமிட உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா❓
🫵🏻“கள்ளக்குறிச்சிக்கு சென்று, அம்மக்களை சந்தித்து ஆய்வு மேற்கொள்ளுங்கள்” என்று உயர்நீதிமன்றமே கூறிய பிறகும் கூட, அமெரிக்காவை விட தூரம் குறைந்த கள்ளக்குறிச்சிக்கு செல்ல இன்னும் உங்களுக்கு வழி தெரியவில்லையா❓
🫵🏻இந்த 8 மாதங்களில் அரசியல் படுகொலைகள், போதை வன்முறைக் கொலைகள் உள்ளிட்ட 595 கொலைகளால் தமிழகமே அச்சத்தில் உறைந்திருக்க, மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யாமல் நீங்கள் இன்பச்சுற்றுலா செல்வது என்ன நியாயம்❓
🫵🏻போதையின் பிடியில் தமிழகம் சிக்கித்தவிக்க, உங்கள் கட்சிக்காரர்களே போதைக் கடத்தலில் தொடர்ந்து கைதாகி வரும் இந்நிலையில், உங்களுக்கு இந்த உல்லாசப்பயணம் எதற்கு❓
🫵🏻தொடர் மின்கட்டண உயர்வு, தோழில்வரி உயர்வு, பத்திரப்பதிவு கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வுகளால் தமிழக மக்கள் விழிபிதுங்கிக் கொண்டிருக்க, இன்பச்சுற்றுலா செல்வதுதான் ஒரு முதல்வருக்கு அழகா❓
🫵🏻ஒரு லட்சம் மக்களுக்கு ஒரு மருத்துவருடன், படுக்கை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தமிழக அரசு மருத்துவமனைகள் அல்லல் படுகையில், அத்துறை அமைச்சரை அழைத்துக் கண்டித்தீர்களா❓
🫵🏻இடிந்து விழும் மேற்கூரை, ஆசிரியரில்லாத வகுப்பறைகள், தரமற்ற சத்துணவு, சிதிலமடைந்து பூட்டிக் கிடக்கும் ஆய்வகங்கள், பாதி வழங்கப்படாமல் நிலுவையில் நிற்கும் பள்ளிச் சீருடைகள் என தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறையே பரிதாப நிலையில் இருக்கையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்னதான் செய்கிறார் என்று எதாவது விசாரித்தீர்களா❓
🫵🏻உங்கள் நிர்வாகத் திறனின்மையால் தமிழகமே இப்படித் தத்தளிக்கையில்,
உங்களுக்கு இந்த உல்லாசப்பயணம் தேவைதானா❓” எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.