“கூடா நட்பு கேடாய் முடியும் தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்”-அதிமுகவை விமர்சித்து பாஜக போஸ்டர்

 
அண்ணாமலை

தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்", "கூடா நட்பு கேடாய் முடியும்"-என அ.இ.அ.தி.மு.க.வை விமர்சிக்கும் வகையிலும் "வேண்டும் மீண்டும் அண்ணாமலை" என அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தும் வாசகங்கள் அடங்கிய சுவரொட்டி விருதுநகரில் ஒட்டப்பட்டுள்ளது.

அண்மையில் அ.இ.அ.திமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதனையடுத்து, வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க, பாஜக கூட்டணி அமைய உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான முயற்சியில் இரு கட்சி தலைமைகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவிக்காலம் முடிவடையும் நிலையில் பாஜகவுக்கு புதிய மாநில தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதே போல், விருதுநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவை விமர்சித்தும் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வாசகங்கள் அடங்கிய போஸ்டரை பாஜக விருதுநகர் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் சிபிச்சக்கரவர்த்தி என்பவர் ஒட்டியுள்ளார். ஒட்டப்பட்டுள்ள இப்போஸ்டரில் "தற்குறியுடன் கூட்டணி வேண்டாம்" (அதிமுக) "கூடா நட்பு கேடாய் முடியும்"-"வேண்டும் மீண்டும் அண்ணாமலை" என்ற வாசகங்கள் மற்றும் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரின் புகைப்படங்கள்,தாமரைச் சின்னம் ஆகியன போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. இது, அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.