“அண்ணாமலை தலைவரான பின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை”

 
Annamalai

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின் கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை என்று பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ள பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் சிவ பாலன் குற்றம் சாட்டினார்.

Image

தமிழ்நாடு பாஜக ஓபிசி அணி மாநில செயலாளர் சிவபாலன் இன்று நாகர்கோவிலில் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜனதாவில் இளைஞர் அணி மாநில செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளேன். தற்போது உள்ள மாநில தலைமை பழைய நிர்வாகிகளுக்கு உரிய மரியாதை தருவதில்லை. இதற்கு அண்ணாமலை ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். கடந்த நான்காண்டு 4 மாத காலமாகவே பாஜகவில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை நடத்தி வந்தேன். அண்ணாமலை பாஜக தலைவர் ஆன பின்னர் பழைய நிர்வாகிகளுக்கு மரியாதை இல்லை. இப்போது நடப்பதை பற்றி மட்டுமே அவர்கள் நினைக்கிறார்கள். கடந்த 20 ஆண்டுகளாக வேலை செய்தவர்கள் மரியாதை இல்லாத நிலையில் உள்ளனர். அதுவும் நான் விலகுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ஒரு சதவீதம் வேலை செய்யாததன் காரணமாக 99 சதவீதம் வேலை செய்தவர்களை தண்டிக்கக் கூடாது. இதனால் கட்சியில் பல ஆண்டுகளாக பணியாற்றியவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பாஜக சமூக வலைதளங்களில் ஒரு பிரிவாக  வேலை செய்கிறார்கள். அது கோஷ்டி போல் உருவாகிறது. பாஜகவில் இருந்து வெளியேறுவதற்கு நிறைய பேர் தயாராக இருக்கிறார்கள். இவ்வளவு காலமும் அந்த கட்சியில் இருந்தாகிவிட்டது என்ன செய்வது என்ற மனநிலையில் பலரும் இருக்கிறார்கள். விரைவில் அவர்களும் வெளியேறுவார்கள். பாஜகவில் தனிநபர் துதி பாடுவது ஒரு பிரச்சனையாக எழுந்து வருகிறது.

தமிழக அரசு தற்போது மாநிலத்தில் நல்லாட்சி புரிந்து வருகிறது. அதேபோன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்டத்திற்கான வளர்ச்சியில் முக்கியத்துவம் அளித்து பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் நான் அவரது முன்னிலையில் தி.மு.க.வில் நான் இணைந்துள்ளேன்” என்றார்.