பெண்ணை காலால் எட்டி உதைத்த விவகாரம்- பாஜக ஊராட்சி தலைவர் கைது

 
வைரல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே நிலத்தகராறில் பாஜக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பெண்ணின் வயிற்றில் மிதித்த வீடியோ வைரலான நிலையில், பாஜக ஊராட்சி தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

BJP union councilor Savarkar kicked woman over land dispute in Kanyakumari

கன்னியாகுமரி மாவட்டம்  களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சரோஜா. இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த சுபி மோள் என்பவருக்கும் நிலம் சம்பந்தமாக எல்லை தகராறு இருந்துள்ளது. இது சம்பந்தமாக சுபி மோளுக்கு ஆதரவாக சரோஜாவிடம் பேச்சு வார்த்தை நடத்த மெதுகும்பல் ஊராட்சி தலைவர் சசிகுமார் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பாரதிய ஜனதா கவுன்சிலர் சவார்க்கர் ஆகியோர் சம்ப இடத்திற்கு வந்தனர். 

இவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது வாக்குவாதம் ஏற்பட்டு முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய பாரதிய ஜனதா கவுன்சிலர் சவார்க்கர் சரோஜாவை வயிற்றில் மிதித்து தாக்கி உள்ளார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் சரோஜா அளித்த புகாரின் அடிப்படையில், பாஜக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சவார்க்கர், மெது கும்மல் ஊராட்சி தலைவர் சசிகுமார்  சபீர், சுபி மோள் ஆகியோர் மீது களியக்காவிளை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 

இதே போன்று சுபி மோள் அளித்த புகாரின் அடிப்படையில் சரோஜா மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது, பெண்ணை வயிற்றில் மிதித்து தாக்கிய ஒன்றிய கவுன்சிலர் சவர்க்கரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மெதுகும்பல் ஊராட்சி தலைவர் சசிகுமாரை களியக்காவிளை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள பாரதிய ஜனதா ஒன்றிய கவுன்சிலர் சவார்க்கரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர், மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.