விஜய் புதிய கருத்து எதையும் கூறவில்லை; ராகுல் சொன்னதையே கூறுகிறார்- நாராயணசாமி

 
ட் ட்

தவெக மாநாட்டில் விஜய் புதிய கருத்து எதையும் கூறவில்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி  பேட்டி அளித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, “தவெக முதல் மாநாடு நடத்திய விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். மாநாட்டில் அவர் எந்த புதிய கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் கூறிவரும் மதவாதம் ஒழிப்பு, நீட் ஒழிப்பு, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றைத்தான் கூறியுள்ளார். ஏற்கனவே 2 ஆண்டுகளாக ராகுல்காந்தி பல்வேறு கூட்டங்களில் பேசிய கருத்துக்கள்தான். விஜய் புதிய அரசியல்பாதை  அமைப்பார் என எதிர்பார்த்தோம், ஆனால் அது இல்லை. இருப்பினும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இறுதி முடிவு எடுக்க  வேண்டியது மக்கள்தான். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

பார்களை குறைக்க  வேண்டும் என்று கூறி வருகிறோம். கலாச்சாரம், சட்ட ஒழுங்கு சீர்குலைவை ஏற்படுத்தும் ரெஸ்டோ பார்களுக்கு தொடர்ந்து புதுவை அரசு அனுமதி அளித்து வருகிறது. 2026 இந்தியா கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றால் அனைத்து ரெஸ்டோபார்களும் மூடப்படும். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பார்களையும் அகற்றுவோம். ரங்கசாமி வெறும் அறிவிப்பு முதலமைச்சராக இருந்து வருகிறார் என தொடர்ந்து கூறி வருகிறோம். தற்போதும் தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரையும் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் பெரும்பாலான ரேஷன்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். ரூ. 1000ம் மதிப்புள்ள பொருட்கள் ரூ.500க்கு வழங்கப்படும் என்றும்  அறிவித்தார். அதை வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சென்டாக்கில் தொடர்ந்து பல முறைகேடுகள் நடந்து வருகிறது.  என்ஆர்ஐ ஒதுக்கீட்டில் 12 பேர் போலி சான்றிதழ் அளித்து மருத்துவ கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அவர்களின் சேர்க்கை அனுமதியை ரத்து  செய்துள்ளனர். 

Image

வெளிநாட்டு தூதரக முத்திரையை பயன்படுத்தி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். இதற்கு அவர்கள்மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை செய்தது யார்? என கண்டறிய வேண்டும். இதற்காக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். புதுவை சட்டசபையில் மின்துறையை தனியார்மயமாக்க மாட்டோம் என முதல அமைச்சரும், அமைச்சரும் உறுதியளித்தனர். ஆனால் மத்திய  மின்துறை மந்திரி பங்கேற்ற கூட்டத்தில், கலந்துகொண்ட முதல அமைச்சரும், அமைச்சரும் இதுகுறித்து வாயே திறக்கவில்லை. இதன்மூலம்  மின்துறையை தனியார்மயமாக்க அரசு வேகமாக செயல்படுகிறது என தெரிகிறது.

இதனால் மின்துறை ஊழியர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பயன்படுத்திய மின்சாரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்காமல் பல பெயர்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது மக்களிடம் கொள்ளையடிப்பதற்கு சமம். தாழ்த்தப்பட்டோர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கவர்னர் பேசும்போது நலத்திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை என நேரடியாக அரசு மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் சார்பிலும் பலமுறை கூறியுள்ளோம். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது” எனக் குற்றஞ்சாட்டினார்.