70 நாட்களாச்சி! திமுக அரசின் சமூக நீதி தோல்வி- பாஜக

வேங்கை வயலில் பட்டியிலன மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அற்ப பதர்களை இன்று வரை கைது செய்யாத தமிழக காவல் துறையின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு சி.பி.சி.ஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது டிவிட்டர் பக்கத்தில், “வேங்கை வயலில் பட்டியிலன மக்களுக்காக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்த அற்ப பதர்களை இன்று வரை கைது செய்யாத தமிழக காவல் துறையின் மெத்தனம் கண்டிக்கத்தக்கது.இந்திய சுதந்திர வரலாற்றில் இதுவரை நடந்திராத கேவலம் இது!பட்டியலின மக்களுக்காக ஒரு குடிநீர் தொட்டி என்பதே, எப்படிப்பட்ட அவல நிலையில் தமிழகம் உள்ளது என்பதை உணர்த்துகிறது.
எஸ்.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு, விசாரணை நடத்தி 70 நாட்களாகியும் இது நாள் வரை யாரையும் கைது செய்யவில்லை என்பது தமிழகம் சாதிய கொடுமையில் சிக்கித் தவிக்கிறது என்பதை தெளிவாக உணர்த்துகிறது. நீதியை நிலைநாட்ட வேண்டுமென்றால், சாதிய பிரச்சினைகளை புறந்தள்ளி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த வேண்டியது காவல் துறையின் கடமை. தி மு க அரசின் மிக முக்கியமான சமூக நீதி தோல்வி இது!” என சாடியுள்ளார்.