ஆர்.எஸ்.பாரதி நாக்கை அடக்கி பேச வேண்டும்- நாராயணன் திருப்பதி
நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகாலாந்து மக்களை இழிவுபடுத்தி பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும். வீணாய் பிறந்து வீணராய் விளங்கும் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலையை ஆணாய் பிறந்து வீணாய் போனவன் என்று பேசுவதா? நாக்கை அடக்கி பேச வேண்டும் ஆர் எஸ் பாரதி. பிரதமரும், எங்களின் தலைவருமான நரேந்திர மோடி அவர்களின் தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை குறித்து பேசுவது பண்பாடாகாது என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆர்.எஸ். பாரதிக்கு எடுத்துரைக்க வேண்டும். ஒரு வினைக்கு எதிர்வினையாற்ற ஒரு நொடி போதாது. ஆனால், அரசியல் நாகரீகம் கருதி அமைதி காக்கிறோம். இனியும் அநாகரீகமாக எங்கள் தலைவர்கள் குறித்து பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. நாகரீகமான, பண்பாட்டு அரசியலை பின்பற்றுவது தான் வாக்களித்த மக்களுக்கு நீங்கள் ஆற்றும் கடமை.
அதை விடுத்து, மலிவு அரசியலை முன்னெடுத்து, தரக்குறைவான பேச்சுகளை மக்கள் மத்தியில் பேசுவது முறையற்றது என்பது ஆர் எஸ் பாரதி போன்ற மூன்றாம் தர பேச்சாளர்களுக்கு புரியாமல் இருக்கலாம். ஆனால், பொறுப்பான தமிழக முதலமைச்சர் பொறுப்பில் உள்ள திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு புரியுமா என்பதே புதிர். நீண்ட கால அரசியல் அனுபவம் கொண்ட முதலமைச்சர் கண்ணியத்தை கடைபிடிக்க தன் கட்சியினருக்கு அறிவுறுத்துவாரா அல்லது பதவிக்காக, ஆட்சி அதிகாரத்திற்கான அராஜக, அநாகரீக போக்கை தி மு கவினர் தொடர அனுமதிப்பாரா? அதிகாரம் நிலையானது அல்ல என்பதை முதல்வர் உணர்வாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.