ஒரே நாடு, ஒரே தேர்தல்- அவசியம் மட்டுமல்ல; அவசரமும் கூட... பாஜக விளக்கம்

 
narayanan thirupathi

ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்துள்ளார்.

narayanan thirupathy

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், “பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கான தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து தொடர்ந்து பாஜக வலியுறுத்தி வருகிறது. 1999 ம் ஆண்டே பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையிலான சட்ட ஆணையம் இதை பரிந்துரைத்தது. பாஜகவின் மூத்த தலைவர் திரு.அத்வானி அவர்கள் இந்த கருத்தை தொடர்ந்து பல காலங்களாக வலியுறுத்தி வந்தது  குறிப்பிடத்தக்கது. 

குடியரசாகிய பின் முதல் நான்கு தேர்தல்களும் (1951, 1957,1962,1967)    அதன் அடிப்படையிலேயே நடைபெற்றன. ஆனால், அதன் பின்னர் பல்வேறு அரசியல் காரணங்களுக்காக சில மாநில அரசுகள் கலைக்கப்பட்ட காரணத்தினாலும், 1970 ம் ஆண்டு முன்கூட்டியே பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாலும், இயல்பாக நடைபெற்று கொண்டிருந்த தேர்தல் முறையானது வழி தவறி போனது என்பதே உண்மை. நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்ற கொள்கையோடே விதிமுறைகள் அமைக்கப்பட்டன என்பதும், அரசுகள் கலைக்கப்படும் என்ற சிந்தனைகள் இல்லாது இருந்த நிலையில், வருடத்திற்கு சில மாதங்களில்  தேர்தல்கள் என்ற சூழ்நிலையை உருவாக்கியது.

தெரியாது நாம் செய்த தவறை திருத்தி கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதை தற்போது உணர்வது சிறப்பை தரும். பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலைகளை ஒரே நேரத்தில் நடத்துவதால் மாநில உரிமைகள் பறி போகும், மாநில கட்சிகளின் செல்வாக்கு குறையும் என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல மாநில கட்சிகளுடனான கூட்டணி ஆட்சியே இந்த குற்றச்சாட்டை முறியடிக்கும். மேலும், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் என்ற நிலை வருவது நிலையான நிர்வாகத்தை, தடையில்லா மக்கள் நலப்பணிகளை பாதிக்கிறது என்பது கண்கூடு. பல மாநிலங்களில்  தேர்தல் விதி முறைகள் அமலுக்கு வந்து விடுவதால், மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்கள் மக்களை சென்று அடைவதில் தாமதம் ஏற்படுவதோடு மற்ற மாநிலங்களோடு இணைந்து செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் பின் தள்ளப்படுவது தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. அதே போல் பாராளுமன்ற தேர்தல்  நடைபெறும் நேரத்தில் மூன்று மாதங்களும், பின்னர் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் மூன்று மாதங்களும் பெரிய திட்டங்கள், நலப்பணிகள் போன்றவைகள் செயல்படுத்தப்படாமல் இருப்பது, அந்த நேரத்தில் அதிகாரிகளின் பணியிட மாற்றம், கொள்கை முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை ஆகியவை அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.

Complete drama...": TN BJP leader Narayanan Thirupathy on Senthil Balaji's  hospitalisation post ED custody

ஒரு சட்டமன்ற / பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தால் வெற்றி பெறுபவர்  அந்த சட்டமன்ற காலத்திற்கு மட்டுமே நீடிக்க முடியும் என்ற விதி, ஒட்டுமொத்த சட்டமன்ற/பாராளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடந்தால் பொருந்தாதா என்பது சிந்திக்கப்பட வேண்டிய கேள்வி. 'இந்தியாவில் தேர்தல்கள் தான் ஊழலுக்கு மூல காரணமாக அமைந்துள்ளது' என்று முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி அவர்கள் குறிப்பிட்டுள்ளது சற்றே திகைக்க வைத்தாலும், சிந்திக்க வைத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தந்த தொகுதி மக்களின் பிரதிநிதியாக செயல்பட வேண்டும் என்பது இயல்பானது என்றாலும், அதிகாரம் என்பது முன்னெடுக்கப்பட்டு கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை என்கிற எண்ணமே முன் நிறுத்தப்பட்டு கட்சியின் பிரதிநிதியாகவே தற்போது இயங்குவது என்பதை வருத்தத்தோடு ஏற்றுக்கொள்ள தான் வேண்டும். 

பல்வேறு காலகட்டங்களில் தேர்தல்கள் நடப்பதால், வேட்பாளர்கள் அதிக பணத்தை செலவிட நேர்கிறது. வரையறுக்கப்பட்ட செலவை விட பன்மடங்கு அதிகமாக செலவிட வேண்டிய நிலையில், கருப்பு பண புழக்கம் தேர்தல் காலங்களில் அதிகளவு புழக்கத்தில் இருப்பது ஊழல் அரசியலுக்கு வழிவகுக்கிறது. சமீப காலங்களில் 'வோட்டுக்கு நோட்டு' என்பது அதிகரித்து வருவது மிக பெரிய சாபக்கேடாக விளங்கி ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது கண்கூடு. பல சமயங்களில் பல இடங்களில் தேர்தல் என்பதால் கட்சிகளும் அதிக அளவில் நிதி திரட்ட வேண்டியிருப்பதும், அதனாலேயே அதிக நிதி கொடுப்பவர்கள் ஆதிக்கமும் அரசியலில் அதிகரித்து வருவது தவிர்க்க முடியாததாகி விட்டது என்பதில் யாருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்க முடியாது. 

கடந்த 2014ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை நடத்தியதற்கு ரூபாய் 3870 கோடி செலவிடப்பட்டுள்ளது. அதே போல் ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தல்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ரூபாய் பத்தாயிரம் கோடி செலவாகிறது என்பதும் இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கும் என்பதும் அச்சுறுத்தும் விவகாரம். அரசின் செலவே இத்துணை என்றால், வேட்பாளர்களின் செலவு, அரசியல் கட்சிகளின் செலவு இதை போல் பல மடங்கு உயரும். இந்த செலவுகள் லஞ்சம், ஊழலுக்கு வழிவகுக்கின்றன என்பதும், பணவீக்கத்திற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது என்பதும், ஒரே தேசம், ஒரே தேர்தல் என்பதை நாம் ஏற்று கொண்டாக வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகிறது. ஓவ்வொரு தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியல் மாற்றம், திருத்தம்,  கூட்டல், கழித்தல் ஆகியவற்றில் அரசியல்  முறைகேடுகளை நீக்க வேண்டுமெனில்,  அனைத்து தேர்தல்களுக்கும்  ஒரே வாக்காளர் பட்டியல் கால விரயத்தை, பண விரயத்தை குறைப்பதோடு, முறைகேடுகளை தடுக்கும்.

bjp narayanan thirupathy took charge as the director rec india

சில செய்திகளின் அடிப்படையில்,  அரசியல் கட்சிகளால் 1998ம் ஆண்டு தேர்தலில் 9000 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாகவும்,  2014ம் ஆண்டு 30000கோடி ரூபாயாக  உயர்ந்த இந்த தொகை 2019 ம் ஆண்டு 60000 கோடி ரூபாயாக உயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கான தேர்தல் சீர்திருத்தங்களை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். குறிப்பிட்ட காலத்திற்குள் பல காரணங்களால்  பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் அடுத்த தேர்தலுக்கு குறுகிய காலம் இருந்தால், அடுத்த பாராளுமன்றம் அமையும் வரை  குடியரசு தலைவர் நாட்டின் நிர்வாகத்தை நடத்தலாம் அல்லது தேர்தலுக்கு நீண்ட காலம் இருந்தால், தேர்தலை நடத்தி அந்த தேர்தலில் வெற்றிபெறும் அரசு  அடுத்த தேர்தல் நடத்தபட வேண்டிய காலம் வரையில் மட்டுமே  இயங்கும் ( அதாவது எஞ்சியுள்ள காலம் மட்டும்) வகையில் மாற்றங்களை கொண்டு வரலாம். அதே போன்ற ஒரு திட்டத்தை சட்டசபைகளுக்கும் கொண்டு வருவது குழப்பங்களை தவிர்ப்பதோடு, மத்திய மாநில அரசுகளின் கட்டமைப்பு திட்டங்கள் தடைபடாது மக்களை சென்றடைவதோடு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதை விடுத்து,  இதனால் மாநில சுயாட்சி பாதிக்கும், மாநில கட்சிகளின் வலு குறையும் என்பதெல்லாம் ஒரு வலிமையான மாநிலத்தை, தேசத்தை வலுவிழக்க செய்யும் வாதங்களாகவே பார்க்கப்படும். இந்த ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற கருத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியம் மட்டுமல்ல அவசரமும் கூட” எனக் குறிப்பிட்டுள்ளார்.