போக்சோ குற்றவாளிக்கு அதே கல்லூரியில் முதல்வர் பதவி வழங்குவதா?- நயினார் நாகேந்திரன்
தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத்தில் நீதியும் சட்டம்–ஒழுங்கும் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை நந்தனம் YMCA உடற்கல்வியியல் கல்லூரியில் மாணவிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் போக்சோ சட்டத்தில் கைதான ஜார்ஜ் ஆப்ரகாம் என்பவரை, பாதிக்கப்பட்ட அதே மாணவி படிக்கும் கல்லூரிக்கு மீண்டும் முதல்வராக நியமித்திருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "போக்சோ வழக்கில் சிக்கியவரை மீண்டும் அதே கல்லூரியில் முதல்வராக்கியது எப்படி?" என்று சென்னை உயர்நீதிமன்றமே சம்மட்டி அடி கொடுத்துக் கேள்வி எழுப்பும் அளவிற்கு, தமிழகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் நிர்வாகத்தில் நீதியும் சட்டம்–ஒழுங்கும் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவிக்கு நீதி பெற்றுத் தராமல், குற்றவாளிகள் மீண்டும் அதிகார நாற்காலியில் அமர்வதை வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பாலியல் குற்றவாளிகளுக்குத் துணைபோகும் கலாச்சாரம் தவெக-விற்கும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கும் புதிதல்ல. டெல்லி ஜே.என்.யு-வில் (JNU) மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காங்கிரஸ் எம்.பி. விவகாரத்தில் ராகுல் காந்தி மவுனம் காப்பது போல, சென்னையில் போக்சோ குற்றவாளியான கல்லூரி முதல்வரைக் காப்பாற்ற தவெக அரசும் கபட நாடகம் ஆடுகிறது. வெற்று வாக்குறுதிகளால் ஆட்சியைப் பிடித்த திரு. விஜய் அவர்கள், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாமல் திணறி வருகிறார். போக்சோ குற்றச்சாட்டுக்கு ஆளான நந்தனம் கல்லூரி முதல்வர் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; பாதிக்கப்பட்ட மாணவிக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இல்லையேல், மாணவிகளின் கண்ணியத்தோடு விளையாடிக் குற்றவாளிகளுக்குக் கவசமாக நிற்கும் தவெக அரசுக்கு, ஒட்டுமொத்த தமிழகத் தாய்மார்களும் பெண்களும் மிக விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

