அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருக்கு உலை- நயினார் நாகேந்திரன் கண்டனம்
தவெக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று 'ரீல்ஸ்' எடுத்து விளம்பரம் தேடுவதில் காட்டும் ஆர்வத்தை, பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வதில் காட்டியிருந்தால் மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “அரசுப் பள்ளி மாணவர்களின் உயிருக்கு உலை வைக்கும் தவெக அரசின் மெத்தனப் போக்கு! கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டி அரசுப் பள்ளியில், கிருமிநாசினி (Bleaching Powder) கலந்த குடிநீரை அருந்திய 18-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு மிகுந்த கவலையடைந்தேன். மாணவர்களின் உயிருடன் விளையாடும் தவெக அரசின் இத்தகைய மெத்தனப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தவெக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று 'ரீல்ஸ்' எடுத்து விளம்பரம் தேடுவதில் காட்டும் ஆர்வத்தை, பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்வதில் காட்டியிருந்தால் மாணவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டிருக்காது.எனவே, இனியாவது விஜய் அரசு வெற்று விளம்பரங்களைத் தவிர்த்து, மாணவர் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். மேலும், இச்சம்பவத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உயர்தர சிகிச்சை வழங்கவும் வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

