”மோடிக்கு நன்றி தெரிவித்து வைத்த பேனர் கிழிப்பு... திமுக செய்கிறதோ என சந்தேகம்”- நயினார் நாகேந்திரன்

 
nainar

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதும், பதாகைகள் கிழிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Image

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தமிழரை நிறுத்திய நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி தெரிவித்து தூத்துக்குடி காயல்பட்டினத்தில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரை மர்ம நபர்கள் கிழித்தனர். இதனை தனது எக்ஸ் தளத்தில் மேற்கோள் காட்டியுள்ள நயினார் நாகேந்திரன், “தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமான ஐயா திரு. ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களுக்கு அடுத்தபடியாக, தேசத்தின் மதிப்புமிக்க உயர் பொறுப்பான குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு ஒரு தமிழரை முன்மொழிந்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றி கூறும் விதமாக, தூத்துக்குடி காயல்பட்டினத்தில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை மர்மநபர்கள் சிலர் கிழித்து நாசப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சர்களின் உருவப்படங்கள் எரிக்கப்படுவதும், பதாகைகள் கிழிக்கப்படுவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஒருவேளை தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆளும் அரசே இதுபோன்ற சமூகவிரோத செயல்களைச் செய்யச் சொல்லி கூலிப்படைகளை ஏவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எனவே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமரை அவமானப்படுத்தும் நோக்கில் இதுபோன்ற சமூகவிரோத சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டுமெனவும், இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழால் இருக்க போதிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.