தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன்

ஆளும் தவெக அரசு, உடனடியாகக் காவல்துறையை முடுக்கிவிட்டு தொண்டாமுத்தூர் பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், “கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பில், பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ள சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரச் செயலை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக நடந்து வந்த குற்றங்கள், இன்று ஆளும் அரசின் கையாலாகாத்தனத்தால் பட்டப்பகலிலேயே நடக்கும் அளவிற்கு ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் தைரியம் வந்திருக்கிறது என்றால், தமிழக காவல்துறை எந்த அளவிற்குச் செயலிழந்து கிடக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

ஆளும் தவெக அரசு, உடனடியாகக் காவல்துறையை முடுக்கிவிட்டு தொண்டாமுத்தூர் பெட்ரோல்  குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்க, கோவை உட்படத் தமிழகம் முழுவதும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.