ஈபிஎஸ் திடீர் பயணத்திற்கு என்ன காரணம்? சசிகலாவின் புதிய கட்சி NDA-வில் இணையுமா?- நயினார் நாகேந்திரன் பேட்டி
தமிழக வெற்றிக்கழகத்துடன் நாங்கள் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, சசிகலா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிப்போம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “பியூஸ் கோயல் சென்னை வருகிறார் என்று எந்த தகவலும் கிடையாது. செய்தியும் கிடையாது. நான் நேற்றும் உங்களை பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு செய்தியே இல்லை. இப்பொழுது இபிஎஸ் டெல்லி சென்று புறப்பட்டு இருக்கிறார் என்று கூறியுள்ளார்கள். தொகுதி பங்கீடு தொடர்பாக எந்த பிரச்சனையும் இல்லை சுமுகமாக போய்க்கொண்டிருக்கிறது. நான் சென்னை சென்ற பிறகு தான் தொகுதி பங்கீடு கொடுத்து முடிவு செய்ய முடியும். இன்று மாலை நான் சென்னை புறப்படுகிறேன்.
எதிரணியில் இருப்பவர்கள் எத்தனை சீட்டு வாங்கி இருக்கிறார்கள் என்று பார்த்து நான் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. நாங்கள் எவ்வளவு வாங்க வேண்டும் என்பதை இனிதான் முடிவு செய்வோம். எங்கள் கூட்டணி பலமாய்ந்த கூட்டணி. சசிகலா தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வருவாரா இல்லையா என்பதை ஓரிரு நாட்களில் தெரிவிப்போம். தமிழக வெற்றிக்கழகத்துடன் நாங்கள் எந்த கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. பாஜக எங்களோடு கூட்டணிக்கு முயற்சி செய்திருக்கிறார்கள் என்று நடிகர் விஜய் ஏன் கூறுகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.
தொகுதி பங்கீடு தேசிய ஜனநாயக கூட்டணியில் வெகுவிரைவில் முடிய உள்ளது” என்றார்.

