"எந்த கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை”- நயினார் நாகேந்திரன்
எந்த கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய அவசியம் பாஜகவிற்கு இல்லை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திருச்சியில் 11 ம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில் அதற்கான ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்டம், பன்னாங்கொம்பில் நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு மாநாட்டில் அதிக அளவிலானோர் கலந்து கொள்வது குறித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமாரை பாஜக கபளீகரம் செய்து விட்டதாக திருமாவளவன் குற்றம்சாட்டுகிறார். பாஜகவைப் பொறுத்தவரை எந்த கட்சியையும் கபளிகரம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அது எங்களுக்கு தெரியவும் தெரியாது. பீகாரில் நாங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் இவ்வளவு காலம் நிதிஷ்குமார் முதல்வராக இருந்தார். தற்போது அவரது மகன் துணை முதல்வராக உள்ளார். இதில் எந்தவித கபளீகரமும் இல்லை. அதைப் பற்றி திருமாவளவன் கவலைப்பட வேண்டிய அவசியமும் இல்லை.
விஜய் இரண்டாம் இடம் வருவார் என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கூறுகிறார். ஜோதிமணி இவ்வளவு நாளும் தி.மு.கவில் இருந்து எவ்வளவு போராடிக் கொண்டிருந்தார்கள் என்பது தெரியும். எந்த கட்சி, எந்த இடம் வரும் என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்வார்கள். தனி மனிதன் யாரும் முடிவு செய்ய முடியாது. தமிழக மக்கள் தேர்தலில் பிரதிபலிப்பார்கள். தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பது காட்டு தர்பார் ஆட்சி. சட்டம், ஒழுங்கு, கஞ்சா, போதை, காவல்துறை கட்டுப்பாட்டில் ஏதும் இல்லை. இதனால் இனிமேல் மக்கள் மனதில் இந்த ஆட்சிக்கு இடமும் இல்லை” என்று கூறினார்.

