“இறைவன் உருவத்தில் பிரதமர் மோடி திருப்பரங்குன்றத்திற்கு வந்தார்”- நயினார் நாகேந்திரன்

 
nainar

2026 பொது தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இறைவன் உருவத்தில் பிரதமர் மோடி திருப்பரங்குன்றத்திற்கு வந்தார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூட்டாக இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய நயினார் நாகேந்திரன், “2026 பொதுத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையிடங்களில் வெற்றி பெற்று நிச்சயமாக ஆட்சி அமைக்கும். ஏன் ஆட்சி அமைக்கும் என்ன காரணம் என்றால்... திமுக ஆட்சி வந்ததுக்கு பிறகு சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு போனதற்கு தினம் தினம் கஞ்சா போதை பொருள்கள், சிந்தடிக் டிரக்ஸ் கொலைகள், கொள்ளைகள் கற்பழிப்பு சம்பவங்கள் தினமும் நடக்கிறது. நாங்குநேரியிலும் நேற்று படுகொலைகள் நடந்திருக்கிறது. சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமான சூழ்நிலையில் இருக்கிறது. இன்றைக்கு பத்தாயிரத்திற்கும் மேலான போதை குற்றங்கள் நடைபெற்று இருக்கிறது. சாத்தான்குளத்தில் லாக்கப் டெத் மரணத்திற்கு குதியோ குதி என்று குதித்தார்கள். ஐந்து வருடத்தில் தற்போது 34 லாக்கப் டெத் நடந்திருக்கிறது.


ரேஷன் கடைகளில் வழங்கக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஒன்றிய அரசு இலவசமாக வழங்குகிறது, அது யாருக்கும் தெரியாது. பள்ளி மாணவர்கள் மது பாட்டில்களை பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நிலை இருக்கிறது. தமிழகத்தில் இறைவன் பிரதமர் மோடி உருவத்தில் திருப்பரங்குன்றத்திற்கு வந்து சென்றார். தென் மாவட்டங்களில் நடைபெறும் குற்றங்களை தடுக்க நிரந்தர தீர்வு ஆட்சி மாற்றம் ஒன்றுதான். அடுத்தபடியாக திருச்சியில் தேசிய ஜனநாயக கட்சியின் மாநாடு. இதற்கு அடுத்து கோயமுத்தூரிலும் நடைபெற இருக்கிறது” என்று கூறினர்.