“தேர்தல் தேதி அறிவித்த பின்னர்தான் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை” - நயினார் நாகேந்திரன்

 
nainar

என்.டி.ஏ கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்படவே இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

திருச்சியில் வரும் 11ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.  இப்பொதுக்கூட்டத்தை நடத்துவதற்கான இடங்களை பார்வையிட்டு தேர்வு செய்ய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்,முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் திருச்சி வந்தனர்.

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்த பின்னர், நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம், திருச்சியில் மாநாடு போல நடத்தப்படவுள்ளது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர். பஞ்சப்பூர் பகுதியில் உள்ள தனியார் இடத்தையும், பின்னர், திருச்சி ஜி கார்னர் மைதானத்தையும் ஆய்வு செய்து இதில் ஏதாவது ஒரு இடத்தில் பொதுக்கூட்டத்தை நடத்தவுள்ளோம். நாங்கள் இன்னும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் அது குறித்து பேசுவோம். எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றுள்ளார். சந்திப்பு எதற்காக என்பது அவர்கள இருவருக்கும் தான் தெரியும். எங்கள் கூட்டணியில் த.வெ.க இணையுமா என்பதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும்” என்றார்.