“தவெக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழிசை கூறியது சரியானது”- நயினார் நாகேந்திரன்

 
நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஒரு மாதத்தில் துவங்கும், வியூகம் அமைப்பதற்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை, இரண்டு மணி நேரமே போதுமானது என பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் மோடி முகாம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் அரசிற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதிகளை 5 ஆண்டுகளாக முதலமைச்சர் ஸ்டாலின் செய்யவில்லை. திமுக அரசு 470 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சொத்து வரி, மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களின் திமுக எதிர்ப்பு மனநிலை அவருக்கு தெரியவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என திமுக குடும்ப ஆட்சி செய்கிறது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அடுத்த தேர்தலில் முதலமைச்சராக்குவதை ஸ்டாலின் நோக்கமாக கொண்டு இருக்கிறார். அதைத் தவிர தமிழ்நாடு மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் அவரிடம் இல்லை.

கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள். இன்னும் நிறைய பேர் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து சேர்வார்கள். அது யார், யார் என்பது அமித்ஷா தமிழகம் வந்து சென்ற பின்பு தெரியும். தமிழ்நாடு, கேரளா போன்ற 4,5 மாநிலங்களை தவிர எல்லா மாநிலத்திலும் பாஜக ஆட்சி தான் இருக்கிறது. அதில் எதாவது சந்தேகம் இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகள், வந்தே பாரத் ரயில்களை கொண்டு வந்தார். அவற்றை பியூஸ் கோயாலை கேட்டு கொண்டு வரவில்லை. எடப்பாடி பழனிசாமி அருமையான ஆட்சி தந்தார். அதனால் மீண்டும் அவர் ஆட்சிக்கு வர வேண்டும் என பாஜக விரும்புகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கிறது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை 1 மாதத்தில் ஆரம்பித்து விடும். தொகுதி பங்கீடை முடிக்க 2 மணி நேரம் போதும். நான் கோவைக்கு அதிக முக்கியத்துவம் தரவில்லை. எல்லா பகுதிகளுக்கும் சென்று வருகிறேன். நான் கோவையில் போட்டியிடவில்லை. தவெக தலைவர் விஜய் எங்களுக்கு எதிரான மனநிலையில் தான் பேசி வருகிறார்.

Advertisement

தவெக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என தமிழிசை செளந்தரராஜனின் கருத்து சரியானது. எல்லோரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அவர் சொல்வதில் தவறில்லை. தவெக வேட்பாளர்களை அறிவிக்கப்படும். தேர்தல் வரட்டும். பிறகு அவர்கள் குறித்து பேசலாம். திருப்பரங்குன்றம் உள்ளிட்ட விவகாரங்களில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி திமுக அரசு நடக்கவில்லை. ஆனால் எதிர்கட்சிகள் குரல்வளையை திமுக அரசு நெறிக்கும் வகையில் பொதுக் கூட்டங்களுக்கு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துள்ளது. திமுக ஆட்சியில் இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம். கூட்டணி கட்சிகள் ஆட்சி அமையும். சிறிய விஷயங்களை ஊடகங்கள் ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள். நானும் அண்ணாமலையும் அண்ணன் தம்பிகளாக இருக்கிறோம். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை” என்றார்.