தேநீர் விருந்து முடிந்து கை கழுவ சென்ற இடத்தில் எல்.கே சுதீஷ் உடன் பேசியது என்ன?- நயினார் நாகேந்திரன் விளக்கம்
தேநீர் விருந்து முடிந்து கை கழுவ சென்ற இடத்தில் எல்.கே சுதீஷ் மற்றும் நயினார் நாகேந்திரன் 10 நிமிடம் பேசிக் கொண்டனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சியின் போது பாஜக, அதிமுக, தேமுதிக, நிர்வாகிகள் தனித்தனி மேசைகளில் அமர்ந்து தேநீர் அருந்தினர். தேநீர் அருந்தி முடிந்ததும் அருகாமை இருக்கைகளில் அமர்ந்திருந்த பிற கட்சி நிர்வாகிகளோடு சிலர் பேசினார். அதிமுக எம்.பி தனபால், எல்.கே.சுதீஷ் அமர்ந்திருந்த இருக்கை அருகே வந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் எல்.கே.சதீஷ் மற்றும் நயினார் நாகேந்திரன் ஒரே நேரத்தில் கை கழுவ சென்றனர். அப்போது சந்தித்துக் கொண்ட இருவரும் பத்து நிமிடத்திற்கு மேலாக பேசிக் கொண்டிருந்தனர்.
முதலில் வெளியே வந்த எல்.கே .சுதீஷிடம் என்ன பேசினீர்கள் என செய்தியாளர் கேள்வி எழுப்ப முற்பட்டபோது, அவர் எந்த பதிலும் சொல்லாமல் கடந்து சென்று விட்டார். பின்னர் வந்த நயினார் நாகேந்திரன் கூறும் போது, தேநீர் விருந்தில் கலந்து கொண்ட அனைவரிடமும் பேசியது வழக்கமான நிகழ்வு தான். இங்கு தேநீர் விருந்து மட்டுமே பரிமாறிக் கொள்ளப்பட்டது. அரசியல் எதுவும் பேசவில்லை என கூறினார்.


