“ஓபிஎஸ் ஓகே சொன்னால் இதை செய்ய நான் ரெடி”- நயினார் நாகேந்திரன்
இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து என NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து கூறியுள்ளார்.
மதுரை சிந்தாமணியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற ஓபிஎஸ் அறிக்கை வெளியிடும் முன்பே பன்னீர்செல்வத்துடன் தொலைபேசியில் பேசினேன். எந்த முடிவும் எடுக்காதீர்கள் என சொன்னேன். தொலைபேசியில் பேசிய நிலையிலும் வெளியேறும் முடிவை பன்னீர்செல்வம் எடுத்துள்ளார்.
ஓபிஎஸ் ஏன் இந்த முடிவை எடுத்தார் என தெரியவில்லை. பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கேட்டிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன். தனிப்பட்ட காரணங்களால் NDA கூட்டணியில் இருந்து விலக ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார். சொந்த பிரச்சனையா? அல்லது வேறு என்ன பிரச்சனையால் கூட்டணியிலிருந்து விலகினார் என தெரியவில்லை. இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து. ஓபிஎஸ் விரும்பினார் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன். முதலமைச்சர் ஓபிஎஸ் சந்தித்தது தொகுதி அல்லது சொந்த பிரச்சனையாக இருக்கலாம்” என்றார்.


