“கஞ்சா, போதைப்பொருள் புழக்கத்தால் 2 வயது குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை”- நயினார் நாகேந்திரன்
கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் 2 வயது குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராசிபுரம் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பிரேம்குமாரை ஆதரித்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூரில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வேனில் நின்றபடி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்கு சேகரித்துப் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில், “கடந்த 5 ஆண்டில், தி.மு.க.வினர் தன்னையும், குடும்பத்தினரையும் மட்டுமே பார்த்துக் கொண்டனரே தவிர, மக்கள் நலனிற்காக எதையுமே செய்யவில்லை. கையிலே புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டிய மாணவர்கள், கஞ்சாவை எடுத்து செல்வதற்கு சட்டம் ஒழுங்கு சரியில்லாததே காரணம். கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் 2 வயது குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தான் காரணம். 8,900 படுகொலைகள் நடந்திருப்பதோடு, அதில் 3,900 பாலியல் குற்றங்கள் பெண்களுக்கு எதிரானதாக உள்ள நிலையில், 300-க்கும் மேற்பட்டவை போக்சோ குற்றங்களாகும்.
விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் பல்வேறு வரி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேர்தல் என்பதால் பணம் மற்றும் பொருட்களை தருவார்கள். அதை அனைத்தையும் நீங்கள் வாங்கி வைத்துக்கொண்டு தாமரை சின்னத்திற்கு வாக்களியுங்கள். உலக நாடுகளின் ஒட்டுமொத்த தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். பிற நாடுகளில் போர் நடந்தாலும், இந்தியா அமைதியாக உள்ளது. ஆனால் தமிழகம் அமைதியாக இல்லை. எனவே தமிழ்நாடு அமைதியாக இருக்க, ஆட்சி மாற்றம் தேவை. எனவே மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் வழிவந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமர ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தாமரைக்கு வாக்களித்து பாஜக வேட்பாளர் பிரேம்குமாரை வெற்றி பெறச் செய்யுங்கள்” என்றார்.


