கல்விக் கூடங்களை ‘சர்ச்’களாக மாற்ற முயற்சி- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
திரு விஜய் அவர்களே கல்லூரிகளில் கிறிஸ்தவப் படிப்புகளை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில், "வரும் கல்வியாண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும், கிறிஸ்தவப் படிப்புகளில் முதுகலைப் பட்டப்படிப்பை (M.A.) அரசு அறிமுகப்படுத்தப் போவதாக வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுப்புகின்றன. சட்டமன்றத்தைப் போலவே கல்விக்கூடங்களையும் தவெக அரசு ‘சர்ச்’களாக மாற்ற முயற்சிக்கிறதோ என்ற சந்தேகமும் எழுகிறது.
கல்வி நிறுவனங்களில் மதப் போதனை தொடர்பான கட்டுப்பாடுகளை வரையறுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 28-வது பிரிவைக் கருத்தில் கொள்ளாமல், சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் கிறிஸ்தவப் படிப்புகளை அறிமுகப்படுத்த அரசு அவசரம் காட்டுவது ஏன்? சட்ட விதிமுறைகளுக்கும் சமத்துவக் கோட்பாடுகளுக்கும் உட்பட்டுத்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது திரு. ஜோசப் விஜய் எனும் தனிநபரின் விருப்பத்திற்காக ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் வளைக்கப்படுகிறதா? மாணவர்களிடையே மதப் பிரிவினையைத் தூண்டும் எந்தவொரு நடவடிக்கையும் பேராபத்தானது.
எனவே, சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து அறிவையும் ஒழுக்கத்தையும் போதிக்க வேண்டிய கல்விக்கூடங்களை, ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த கூடாரங்களாக மாற்றும் எண்ணம் முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு இருக்குமேயானால், அந்த முயற்சியை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும்! இல்லையேல், தமிழக பாஜக சார்பில் பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.

