பள்ளிகளில் தொடரும் சாதிய மோதல்கள்! இதுதான் உங்க சமூக நீதியா?- வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிச் சிறார்களிடையே முற்றிய சாதிய வன்முறையானது, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவின் வெற்றியால் அரசியல் மாற்றம்” - வானதி சீனிவாசன்  நம்பிக்கை | “BJP's Victory on Tamil Nadu will Change Politics” - Vanathi  Srinivasan Hope - hindutamil.in

நெல்லை மாவட்டம் நாகர்கோவில் செல்லும் சாலையில் பொன்னாக்குடி அடுத்துள்ளது மருதகுளம் கிராமம். இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் பொன்னாக்குடி மருதகுளம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவ, மாணவிகள் 12 ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு அதில் ஜாதி ரீதியாக ஒரு தரப்பு மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் தாக்கியதில் இரண்டு மாணவர்கள் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஊருக்கு அருகில் இருக்கக்கூடிய நாங்குநேரி பள்ளி ஒன்றில் ஜாதி ரீதியாக நடந்த மோதலில் மாணவன் வீடு புகுந்து அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் அதே போன்று ஒரு சம்பவமாக இரண்டு பிரிவு மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மோதல் பெற்றோர்களுடைய அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், “திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளிச் சிறார்களிடையே முற்றிய சாதிய வன்முறையானது, தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சாதியை ஒழித்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று ஒவ்வொரு மேடையிலும் முழங்கும் தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் தமிழகத்தில் சாதிய மோதல்கள் தலைவிரித்தாடுகிறது. குறிப்பாக, பள்ளி மாணவர்களிடையே சாதிய மோதல்கள் அதிகரித்து வருகின்றன. 


கள்ளங்கபடமில்லாத பள்ளிச் சிறார்களின் மனதில் கட்டுப்படுத்த முடியாத காட்டுத்தீ போல்  பரவிவரும் சாதிய மோதல்கள், உங்கள் நிர்வாகத்திறனின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதுதான் நீங்கள் மார்தட்டி முழங்கி வரும் சமூக நீதியா திரு. மு.க.ஸ்டாலின்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.