ஒரு கண்ணுக்கு வெண்ணை, ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு வைப்பதுதான் திமுக- வானதி சீனிவாசன்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், சொத்து தொடர்பாக வாரியத்திற்கும், அரசுக்கும், முஸ்லிம் அல்லாத நபர்களுக்கும்தான் பிரச்னை வருகிறது. அதனால் அரசு அதிகாரிகளும் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முஸ்லிம் அல்லாத சொத்து தொடர்பாக வாரியத்திற்கும், அரசுக்கும், நபர்களுக்கும்தான் பிரச்னை வருகிறது. அதனால் அரசு அதிகாரிகளும் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வக்ஃப் வாரிய சொத்துகளைப் பாதுகாக்கவும், திருச்செந்துறை போன்ற தேவையற்ற பிரச்னைகளை தவிர்க்கவும்தான் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது, ஆனால், இந்த விவகாரத்தில் தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாடு அம்பலத்திற்கு வந்துள்ளது.
முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என்று கேட்பவர்கள், இந்து மத கோவில்களை மட்டும் மத நம்பிக்கையில்லாதவர்களைக் நிர்வகிக்கப்படுவதை நியாயப்படுத்துகிறார்கள். தமிழகத்தை ஆளும் திமுக இந்து மதத்தை மட்டும் வெறுக்கும் கட்சி. சனாதனத்தை அதாவது இந்து மதத்தை அழிக்க வேண்டும் என வெளிப்படையாகவே பேசும் கட்சி. இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் சொல்லாத கட்சி, இப்படிப்பட்டவர்கள்தான் இந்து கோவில்களை கட்டுக்குள் வைத்து வழிபாடு உள்ளிட்ட அனைத்திலும் தலையிடுகின்றனர். ஆனால் திமுகவினர் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் மத விவகாரத்தில் அரசு எப்படி தலையிடலாம் என கேட்கின்றனர்.
ஒரு கண்ணுக்கு வெண்ணையும், ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் வைப்பதுதான் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளின் வழக்கம். அதனால், பாலஸ்தீன முஸ்லிம்களுக்கு போராடியவர்களுக்கு, பங்களாதேஷ் இந்துக்களுக்காக ஒரு வார்த்தை சொல்லக் கூட மனமில்லை. திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை மக்கள் புரிந்து கொள்ள வக்ஃப் சட்டத் திருத்தம் ஒரு வாய்ப்பை தந்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.