பிளஸ் 1 மாணவன் பேண்ட்டில் கஞ்சா பொட்டலம்.. கஞ்சா தடுப்பு ஆப்ரேஷன்கள் பெயரளவுதானா?- வானதி சீனிவாசன்

 
வானதி வானதி

சென்னை வியாசர்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்து கொண்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை வியாசர்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவன் தனது பேண்ட் பாக்கெட்டில் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்து கொண்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்விக் கூடங்களை மதுக்கூடங்களாகவும், கஞ்சா நிலையங்களாகவும் மாற்றி மாணவச் சமுதாயத்தை சீரழித்து வைத்திருப்பது விடியா திமுக ஆட்சியின் வெட்கக் கேடு. கடந்த சில மாதங்களாக பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் மது அருந்திய சம்பவங்கள், கஞ்சா போதையில் அப்பாவிகள் மீது தொடரும் தாக்குதல்கள் என தமிழகமே கஞ்சா போதை பொருள் பிடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. 

கஞ்சா தடுப்பு ஆப்ரேஷன்கள், கள்ளச்சாரயம் ஒழிப்பு இவையெல்லாம் வெறும் பெயரளவுக்கு மட்டும் தானா? தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலாக்கத்துறை, போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு செயல்படுகிறதா இல்லையா என்று கேட்கும் அளவிற்கு கஞ்சா போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. மாணவர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசு இன்று அவர்களை போதையின் பாதையில் மாற்றி சமூகக் குற்றாவளிகளாக மாற்றி வைத்திருப்பது விடியா திமுக ஆட்சி அவலத்தின் உச்சம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.