சிறுமியை முள்புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை... குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை- வானதி சீனிவாசன்

 
வானதி வானதி

மீண்டும் மீண்டும் தொடரும் பாலியல் வன்கொடுமைகள். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை திமுக அரசு உறுதிசெய்ய வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருத்தணியை அடுத்த விஜிகே புரம் கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி, இரவு நேரத்தில் இயற்கை உபாதைக்காக வெளியே வந்தபோது, மனித வடிவில் வந்த ஒரு மிருகம் அச்சிறுமியை முள்புதருக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அப்பகுதி மக்கள், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அசாம் மாநிலத்தைச் சேர்ந்த எரோமல் அலி என்பவனைப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்தச் சம்பவம், திமுக ஆட்சியில் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை வெளிப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து, பெண்களும் குழந்தைகளும் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் அவலநிலை உருவாகியுள்ளது. திமுக ஆட்சியில் காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்கப்படாததே இத்தகைய குற்றங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. குற்றவாளிகள் அச்சப்படும் வகையில் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்க வேண்டும். 


ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்து துன்புறுத்துவதில் காவல்துறை தீவிரம் காட்டினாலும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் போதிய அக்கறை காட்டுவதில்லை. எனவே, தமிழ்நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.