"இந்த அராஜக திராவிட மாடல் ஆட்சியை பெண்கள் விரட்டியடிப்பது உறுதி"- வானதி சீனிவாசன்
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நடைபெறாமல் தடுக்கத் தான் திராவிட மாடல் அரசுக்கு திராணி இல்லை என்றால், நடந்த குற்றங்களுக்கு எதிராக புகார் அளிப்பதற்கென ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தக்கூட திறனில்லையா? என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில், “புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி மூலை முடுக்கில் உள்ள கல்வி நிலையங்களில் எல்லாம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், 180 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 46 கல்லூரிகளில் உள்ளகப் புகார் குழுக்களையே அமைக்காமல் திமுக அரசு அலட்சியம் காட்டியுள்ளது மிகுந்த கண்டனத்திற்குரியது. அத்துடன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உள்ளகப் புகார் குழுக்கள் பற்றிய தகவல்களை 100-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் தரவே இல்லை என்பது கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குறியாக்குகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை நடைபெறாமல் தடுக்கத் தான் திராவிட மாடல் அரசுக்கு திராணி இல்லை என்றால், நடந்த குற்றங்களுக்கு எதிராக புகார் அளிப்பதற்கென ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தக்கூட திறனில்லையா? பத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களிலும் கல்வி நிலையங்களிலும் உள்ளகப் புகார் குழுக்களை அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் அறிவுறுத்திய பின்புகூட உள்ளகப் புகார் குழுக்களை அமைக்காது மாணவிகள் பாதுகாப்பை அச்சுறுத்தும் இந்த அராஜக திராவிட மாடல் ஆட்சியை 2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்கள் விரட்டியடிப்பர் என்பது உறுதி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.


