கோவை அமைதியாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லையா?- வானதி சீனிவாசன்
![vanathi](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/458d1a2e1f222c041dc9a2ddecb3e3cd.jpg)
கோவை குண்டுவெடிப்பு குற்றவாளி பாஷாவின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்து தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியுள்ளது திமுக அரசு என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “1998-ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தமிழக வரலாற்றின் ஓர் கருப்பு நாள். அமைதியாக இருந்த கோவையை ரத்த களறியாக்கியதால், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சியே தடைபட்டது. பயங்கரவாதிகளால் கோவை குண்டுவெடிப்பு மட்டும் நடத்தப்படாமல் இருந்திருந்தால், பெங்களூரு, புனே போல கோவையும், தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியிருக்கும்.
கோவையின் வளர்ச்சிக்கு தடையாக இருந்த, 50க்கும் அதிகமானோரின் உயிரிழக்க காரணமாக இருந்த, நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து வாழ்விழக்க காரணமாக இருந்த கோவை குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர் எஸ்.ஏ. பாஷா. கோவை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர் என்று விசாரணை அமைப்புகளால் உறுதி செய்யப்பட்டவர். அப்படிப்பட்ட எஸ்.ஏ.பாஷா உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். அவருக்கு அவரது மத முறைப்படி இறுதி நிகழ்வுகள் நடப்பதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கிய கோவை குண்டுவெடிப்பு காரணமான ஒருவருக்கு இறுதி ஊர்வலம் நடக்க திமுக அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் தவறான முன்னுதாரணத்தை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது.
பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி அளித்திருப்பதன் மூலம் கோவை அமைதியாக இருப்பதை திமுக அரசு விரும்பவில்லையோ என்ற சந்தேகம் எழுகிறது. பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட இந்து அமைப்புகள், பாஜகவின் நிர்வாகிகளின் இறுதி ஊர்வலத்திற்குகூட கடந்த காலங்களில் கோவை காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. ஓராண்டுக்கு முன்பு காரில் சிலிண்டரை வைத்து வெடிக்க வைக்க நடந்த முயற்சி கடவுளின் அருளால் தோல்வியில் முடிந்தது. இப்படி கோவையில் பயங்கரவாதச் செயல்கள் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் நிலையில் கோவை குண்டுவெடிப்பு குற்றவாளியின் இறுதி ஊர்வலத்தை அனுமதித்திருப்பதை ஏற்க முடியாது. கோவை குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்ட கோவை மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். திமுகவுக்கு உரிய நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.