“திமுகவின் பொய் பரப்புச் செயலாளராகவே மாறிய கமல்ஹாசன்”- வானதி சீனிவாசன் விமர்சனம்

 
வானதி சீனிவாசன் வானதி சீனிவாசன்

நீட் தேர்வை எதிர்க்கும் திமுக அரசின் பொய் பரப்புச் செயலாளராகவே மாறி வதந்திகளைப் பரப்பிவரும் திரு. கமல்ஹாசனுக்கு எனது கடும் கண்டனங்கள் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

உதட்டளவில் மட்டுமே சேவை செய்யக் கூடியவர் கமல்ஹாசன்” - வானதி ஸ்ரீனிவாசன்  கடும் தாக்கு

இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு சிதைத்து விட்டதாகவும், அதனால் நீட் தேவையில்லை எனவும் கூறியுள்ள திரு. கமல்ஹாசன் அவர்களின் பேச்சு முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியின் குவியல். தங்கள் கல்வி வியாபாரம் கெட்டுவிட்டதே என்ற ஆதங்கத்தில் நீட் தேர்வை எதிர்க்கும்  திமுக அரசின் பொய் பரப்புச் செயலாளராகவே மாறி வதந்திகளைப் பரப்பிவரும் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு எனது கடும் கண்டனங்கள்.   

அரசியல் பிரமுகர்களின் சிபாரிசு, லட்சம் லட்சமாக நன்கொடை உள்ளிட்ட அனைத்து தடைகளையும் தகர்த்து, “கல்வி” என்ற ஒரே ஆயுதத்தைப் பயன்படுத்தி “நீட் தேர்வு” மூலம் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவத் துறையில் கோலோச்சுவதைப் பார்த்து திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு என்ன ஒவ்வாமையோ தெரியவில்லை. கடந்த ஆண்டு நீட் தேர்வில் கூட தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்ததை நாம் அனைவரும் கொண்டாடினோம். ஆனால், கடந்த 2017-க்குப் பிறகு அனைத்துப் பிள்ளைகளுக்கும் மருத்துவக் கல்வி மறுக்கப்பட்டுவிட்டது என்ற தொனியில் திரு. கமல்ஹாசன் அவர்கள் பேசுவதை பார்த்தால், அவருக்கு நாட்டு நடப்புகள் குறித்த அடிப்படை அறிவு கூட இல்லை என்பதாகத் தான் தெரிகிறது.  


எனவே, கட்சி ஆரம்பித்த புதிதில் ஆவேசமாக திமுகவை எதிர்த்துவிட்டு இன்று பதவிக்காக அதே திமுகவிடம் ஐக்கியமாகி தனது அடையாளத்தை தொலைத்து நிற்கும் திரு. கமல்ஹாசன் அவர்களே, பிள்ளைகளின் மருத்துவக் கனவுகள் மீது உண்மையிலேயே உங்களுக்கு அக்கறை இருந்தால், தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து தொடர்ந்து குட்டு வாங்கிக் கொண்டிருக்கும் உங்கள் கூட்டணிக் கட்சியான திமுகவை கண்டியுங்கள். அதை விட்டுவிட்டு தேவையற்ற கருத்துகள் மூலம் படிக்கும் பிள்ளைகளிடம் பதற்றத்தையும் அவநம்பிக்கையையும் விதைக்க வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.