நாட்டின் நலனை விரும்புகிற அனைவரும் ’சங்கி’தான்- வானதி சீனிவாசன்

 
‘வேல் யாத்திரை தடை பாரபட்ச செயல்’ – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

நாடாளுமன்ற தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி சார்பில் தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ராம் நகர் ஆறாவது மெயின் ரோடு வேளச்சேரியில் இன்று‌ நடைபெற்றது. இதில் பா.ஜ.க. தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கலந்துகொண்டு புதிய தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் உள்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

வானதி சீனிவாசன்

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், “தமிழக பா.ஜ.க. சார்பாக ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு வருகிறது. தென்சென்னையில் நாடாளுமன்ற அலுவலகம் இன்று காலை திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் அலுவலகம் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள உதவியாக இருக்கும். தேசிய அளவில் ஒரு கோடி மகளிர் சுய உதவி குழுக்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து வருகிறோம். மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்கான பணி பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களையும் கணக்கெடுத்து மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க உள்ளோம். "கிராமத்திற்கு செல்வோம்" என்ற நிகழ்ச்சியும் கட்சி சார்பில் தொடங்கப்பட உள்ளது. கட்சி நிர்வாகி ஒருவர் கிராமத்திற்கு சென்று ஒரு இரவு அங்கு தங்க வேண்டும். கிராம மக்களிடம் பேசி அவர்களது பிரச்சனைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி பல்வேறு மாநிலங்களில் கூட்டணி கட்சி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. பத்து நாட்களுக்கு முன் இந்தியா கூட்டணியில் இருந்தவர்கள் இப்போது 10 நாட்களுக்கு பிறகு சிதறிப் போகி இருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா கூட்டணி சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. அந்த கூட்டணியின் குறிக்கோள் மக்களை பாதுகாப்பது கிடையாது. அவர்களது நோக்கம் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்க வேண்டும் என்பதும் பிரதமருக்கு மோடி எதிராகவும் தான் இருந்தது. மக்களின் நலனுக்காக அவர்கள் கூட்டணி சேரவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகள் கூட மீண்டும் கூட்டணிக்கு வருகிறது. மக்களின் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் யார் கூட்டணிக்கு வந்தாலும் பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளும். சங்கி என்ற வார்த்தையை குறிப்பிட்ட பதமாக பயன்படுத்துகிறார்கள். சங்கி என்ற சொல்லை இழிவுபடுத்தும் சொல்லாக பயன்படுத்துகிறார்கள். பா‌.ஜ.க.வில் இருப்பவர்களை குறி வைத்து இதுபோன்று ட்ரோல் செய்கிறார்கள். சங்கி என்பதற்கு எங்களால் அர்த்தம் சொல்ல முடியாது. நாட்டின் நலனை விரும்புவர்களையும் நாட்டின் நலனுக்கு எதிராக உள்ளதை எதிர்ப்பவர்களையும் சங்கி என்று கூறுகிறார்கள். ரஜினி, கமல் ,விஜய் என எல்லா நடிகர்களிடமும் ஆதரவை கேட்பது எங்களது வேலை. எல்லோரிடமும் ஆதரவு கேட்போம். கொடுப்பவர்கள் கொடுக்கட்டும்” என்றார்.