மக்கள் பிரச்னையை பேசாமல் ஆளுநர் பிரச்னையை பேசுகிறார்கள் - நயினார் நாகேந்திரன்!

 
Nainar Nagendran

மக்கள் பிரச்னையை மையப்படுத்தாமல் ஆளுநர் பிரச்னையை மையப்படுத்தி பேசுகிறார்கள் என பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். 

அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்கள் மற்றும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட 8 மசோதாக்கள்  என 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக குறிப்பிட்டு ஆளுநர் கடந்த 13ஆம் தேதி அதை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார். இந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.  இந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை எதிர்த்து பாஜக வெளிநடப்பு செய்தனர்.

bjp Mlas

சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ஆளுநர் பற்றி பேச கூடாதுனு சொல்லிட்டு, பேச விட்டு கேட்டுக்கிட்டு இருக்கிறார் சபாநாயகர். பல்கலைக்கழக வேந்தகளை முதல்வர் நியமனம் செய்வது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விஷயம். மக்கள் பிரச்னையை மையப்படுத்தாமல் ஆளுநர் பிரச்னையை மையப்படுத்தி பேசுகிறார்கள். உயர்கல்வித்துறைக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. ஆன்லைன் ரம்மி சட்டத் திருத்த மசோதா தேவையில்லாத ஒன்று. இவ்வாறு கூறினார்.