அமித்ஷாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர் அகற்றம்- பாஜகவினர் சாலைமறியல்

 
xs

கோவையில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களை போலீசார் அகற்றியதாக கூறி பாஜகவினர் பீளமேடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் நடைபெறும் பாஜக கட்சி அலுவலகம் திறப்பு விழா,  நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈசா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா இன்று இரவு கோவை வருகிறார். இந்நிலையில் அவரை வரவேற்க பாஜக சார்பில் அவிநாசி சாலையில் கட்சி கொடிகளும்,  பேனர்களும் வைக்கப்பட்டது. முறையாக அனுமதி பெறாமல் வைத்த பாஜக கட்சி கொடி மற்றும் பேனர்களை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனை கண்டித்து பாஜகவினர் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் பாஜகவின், அவினாசி சாலை பீளமேடு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர். மேலும் அனுமதி வழங்குவதாக உறுதி அளித்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

இது குறித்து பேசிய மாவட்ட தலைவர் ரமேஷ், “மத்திய அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க வைக்கப்பட்ட பேனர்களை, நேற்று இரவு போலீசார் அப்புறப்படுத்தி உள்ளனர்.  அப்புறப்படுத்திய பேனர்களை மாநகராட்சி தூய்மை வண்டியில் எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து கடந்த ஒரு வாரமாக போலீசாரிடம் அனுமதி கேட்டுள்ளோம்.  அவர்களும் வாய்மொழியாக அனுமதி கொடுத்த நிலையில், தற்போது பாரத பிரதமர் புகைப்படத்துடன் உள்ள பேனர்கள் மற்றும் கட்சி கொடிகளை அகற்றி உள்ளனர். தற்போது மீண்டும் அனுமதி வழங்குவதாக கூறியதால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.  மீண்டும் போலீசார் அனுமதி மறுத்தால் கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் ஈடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.