ஆட்டு மந்தையுடன் பாஜகவினர் அடைப்பு! துர்நாற்றம் வீசுவதாக மகளிரணி கதறல்
மதுரையில் அனுமதியின்றி நீதி கேட்பு பேரணியில் ஈடுபட்ட பாஜகவினர், ஆடுகள் அடைக்கப்படும் வளாகத்தில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய ஞானசேகரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மதுரையில் அனுமதியின்றி நீதி கேட்பு பேரணியில் ஈடுபட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்து ஆட்டு மந்தை உள்ள இடத்தில் அடைத்துள்ளனர். குஷ்புவும் அதே இடத்தில் அடைக்கப்பட்டுள்ளார். ஆடு வியாபாரிகள் ஆட்டு மகமை கட்டளை திருமண மண்டபத்தில் ஆடுகள் அடைக்கும் வளாகத்தில் பாஜகவினரும் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். அந்த இடத்தில் 200 ஆடுகள் அடைக்கப்பட்டுள்ளதால், ஆடுகளின் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதாக கைதான பாஜகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.