30 கி.மீ. வேகத்தில் செல்லும் அளவிற்கு சென்னை சாலைகளின் நிலை இல்லை - நாராயணன் திருப்பதி

 
narayanan thirupathi

30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடிய அளவிற்கு சென்னையில் உள்ள சாலைகளின் நிலை இல்லை என்பதே உண்மை என தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னையில் குடியிருப்புகள் உள்ள சாலைகளில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று சென்னை போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் கூறியிருக்கும் நிலையில், 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடிய அளவிற்கு சென்னையில் உள்ள சாலைகளின் நிலை இல்லை என்பதே உண்மை. தி மு க அரசு அமைந்த பின் இது வரை சென்னையில் பல இடங்களில் சாலைகள் அமைக்கவில்லை என்பதும், அப்படியே அமைத்தாலும் அவை சரியாக அமைக்கப்படவில்லை என்பதும் கண்கூடு. மழை நீர் வடிகால்வாய்க்காக தோண்டப்பட்ட பின்னர் பெரும்பாலான சாலைகள் இன்று வரை சீரமைக்கப்படாமல் உள்ளது. அன்று வெட்டப்பட்ட, தோண்டப்பட்ட சாலைகள் இன்றளவும் மேடு பள்ளங்களோடு, குண்டும் குழியுமாக இருக்கும் நிலையில், தட்டுத் தடுமாறி  தான் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன என்பதையும், அதனால் வாகனங்களுக்கு ஏற்படும் சேதாரம் குறித்தும் அவர் அறிவாரா? 


மேலும், இந்த பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வடிகால்வாய்கள் சாலைகளை தோண்டி அமைக்கப்பட்டு, அதன் மீது கற்காரைப் பலகைகள் (Concrete Slabs) அமைக்கப்பட்டுள்ள நிலையில், சாலைகளின் அகலம் குறைந்து போயுள்ளது என்பதை அறிவாரா?  குடியிருப்புகள் உள்ள சாலைகளில் ஆக்கிரமிப்புகள்  எந்த அளவிற்கு உள்ளது என்பதை துணை ஆணையர் அறிவாரா? அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சி முன் வருமா? எங்கும் வாகனம், எதிலும் வாகனம் என்பது போல் ஒவ்வொரு தெருக்களிலும் உள்ள டீக்கடைகள் உள்ளிட்ட சிறு கடைகளின் முன் இருசக்கர வாகனங்களின் மற்றும் ஆட்டோக்களின்  அணிவகுப்பை தடுப்பதற்கு ஆவன செய்வாரா கூடுதல் ஆணையர்?  

எல்லாவற்றிற்கும் மேலாக, பல ஒரு வழிச்சாலை சாலைகளில் எதிர் திசையில் செலுத்தப்படும் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை புற்றீசல்கள் போல் பெருகி வருகிறது என்பதையும், அதனால் முறையாக வாகனங்களை செலுத்துவோர் படு இன்னல்கள் குறித்தும் அறிவாரா கூடுதல் ஆணையர் அவர்கள்?  சராசரியாக 30 கிலோ மீட்டர் வேகத்தில் எப்படி சென்னை நகர குடியிருப்பு சாலைகளில் செல்ல முடியும் என்று புரியவில்லை. போக்குவரத்து விதி மீறல்கள், ஆக்கிரமிப்புகள் மற்றும் சாலைகளின் படு மோசமான நிலையில் 10 கிலோ மீட்டர் வேகத்தில் செல்வதே  பெரிய காரியம். கூடுதல் ஆணையரின் நோக்கம் சரியாக இருந்தாலும், அதற்கான சூழ்நிலையை உருவாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தாலும், சென்னை மாநகராட்சி  மற்றும் இதர துறைகளின் ஒத்துழைப்பு கிடைக்குமா என்பது சந்தேகமே! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.