கோவை பாஜக தலைவரைக் கைது செய்தது ஏன்? அண்ணாமலை கண்டனம்!!

 
annamalai

திமுக அரசின் சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

tn

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை  மிரட்டும் வகையில் பேசிய கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார் . உத்தம ராமசாமி பேசிய வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் உத்தமராமசாமியை  போலீசார் கைது செய்தனர் .கோவை மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டு பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.



இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர்ச்சியாக இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசி வரும் திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஆ. ராசா அவர்களை இந்த திறனற்ற திமுக அரசு கண்டிக்கவும் இல்லை, கைது செய்யவும் இல்லை. வெறுப்பை உமிழும் திரு ஆ. ராசா வை கண்டித்ததற்காகக் கோவை மாநகர் மாவட்ட தலைவர் திரு பாலாஜி உத்தமராமசாமி  அவர்களை காவல்துறை இன்று காலை கைது செய்துள்ளதை  தமிழக பாஜக வன்மையாக கண்டிக்கிறது.  மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வரும் திரு ஆ. ராசாவை கைது செய்யாமல், திமுகவின் இரண்டாம் கட்ட பேச்சாளர்களை மிஞ்சிய அவரது இழிவான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்த தமிழக பாஜக மாவட்ட தலைவரைக் கைது செய்தது ஏன்? திமுக அரசே, உங்கள் அடக்குமுறைகளுக்கு நாங்கள் என்றும் அஞ்சமாட்டோம், உங்களது சர்வாதிகாரத்தனத்திற்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள்  என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.