நெல்லையில் சாதி வெறித் தாக்குதல் - குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குக: எல்.முருகன்

 
L Murugan

நெல்லையில் சாதி வெறித் தாக்குதல் - குற்றவாளிகள் மீது,  SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடுமையான தண்டனையை அரசு பெற்று தர வேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். 

CPM explain about incident in which a Scheduled Caste youth was attacked due to casteism in Nellai

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் அருகே பொது இடத்தில் சிறுநீர் கழித்ததற்காக  பட்டியலின இளைஞர்கள் இருவரை பிடித்து கண்மூடித்தனமாக தாக்கிய கும்பல், அவர்களின்  ஆடைகளை களைந்து, அவர்கள் மீது  சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்திருக்கிறது. அவர்கள் வைத்திருந்த பற்று அட்டையை பறித்து அதிலிருந்து ரூ.5000 பணத்தை கொள்ளையடித்திருக்கிறது. பாதிக்கப்பட்ட  இரு இளைஞர்களும்  அவர்களிடமிருந்து தப்பி, ஆடைகள் இன்றி  வீடு திரும்பியுள்ளனர். 

இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “திருநெல்வேலி மாவட்டம், மணிமூர்த்தீஸ்வரம் பகுதியில் உள்ள ஆற்றுப்படுக்கையில் கடந்த மாதம் 30 ஆம் தேதி குளிக்கச் சென்ற விளிம்புநிலை (பட்டியலின) இளைஞர்கள் 2 நபர்களை சாதியை கேட்டு தாக்கியும், அவர்களை நிர்வாணப்படுத்தி, அவர்கள் மீது சிறுநீர் கழித்தும் கொடுமை செய்த வக்கிரம் பிடித்தவர்களின் அநீதியை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.


இப்படிபட்ட குற்றவாளிகள் மீது, sc/st வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனையை இந்த அரசு பெற்று தர வேண்டும். போலி திராவிட மாடல் ஆட்சியில் இன்னும் எத்தனை கொடுமைகளை கான போகிறோம் ? புதுக்கோட்டையில் 300 நாட்களுக்கு மேல் ஆகியும் மனித கழிவு கலந்தவர்கள் யார் என்று தெரியவில்லை! இதே நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், பள்ளி மாணவர் வீடு புகுந்து சாதி ரீதியில் அரிவாள் வெட்டு கொலை வெறி தாக்குதல் என்று தொடர்கிறது. சமூகநீதி ஆட்சி என்று மார்தட்டி கொள்ளும் போலி திராவிட மாடல் அரசு வேங்கை வயல் கொடூரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால் இது போல் நிகழ்வு நடந்திருக்குமா ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.