"நடிகரை பார்க்க கூட்டம் வரும்; அது ஓட்டாக மாறுமா என்பதை சொல்ல முடியாது" - குஷ்பு
தமிழ்நாடு பாஜக தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரிவின் சார்பாக கிராமப்புற ஏழை எளிய மகளிர்கான வாழ்வாதார அடைக்காப்பகம் என்ற சூதேசி, சுயசார்பு மற்றும் சுயவேலைவாய்ப்பு திட்டத் தொடக்க விழா புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக மாநிலத் துணைத் தலைவரும் நடிகையுமான குஷ்பு, பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக என்ஜிஓ பிரிவின் மாநில அமைப்பாளர் அர்ஜுன மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, “தமிழ்நாட்டிற்கு அமித்ஷா வந்தது நிச்சயம் பலனளிக்கும். தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. அதை அமித்ஷாவே உறுதிப்படுத்தியுள்ளார். பாஜகவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. தமிழ்நாடு இந்தியாவின் மாநிலமே அல்ல தனி அந்தஸ்து வேண்டுமென்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்தியா ஒன்றாக இருக்க ஆசைப்படுகின்றோம். ஆனால் திமுக திராவிட கலாச்சாரம் என்ற பெயரில் பிரிக்க ஆசைப்படுகின்றனர். நாங்கள் பிரித்துப் பார்க்கவில்லை. பிரதமர் ஒரு திட்டம் கொண்டு வரும் பொழுது தமிழ்நாட்டிற்கும் சேர்ந்துதான் கொண்டு வருகிறார் தமிழ்நாட்டுக்கு இல்லை என்று சொல்லவில்லை. பிரதமர் தமிழ் மொழி தமிழர் கலாச்சாரம் பற்றி உலகம் முழுக்க பேசி வருகிறார். தமிழ் மொழிக்காக திமுக என்ன செய்தது.
காங்கிரஸ் எப்போது வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் செல்வார்கள். அவர்களுக்கு எங்கே லாபம் இருக்கிறதோ அங்கே செல்வார்கள். தேர்தல் தற்போது தான் வருகிறது விஜய் இப்போதுதான் வந்திருக்கிறார். தேர்தல் முடிந்துவிட்டு பேசலாம். விஜய் மாபெரும் நடிகர். தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஸ்டார் விஜய். 92-93ல் ரஜினி எப்படி இருந்தாரோ அதேபோல் தற்பொழுது மிகப்பெரிய ஸ்டாராக விஜய் தான் இருக்கிறார். விஜய் பார்க்க கூட்டம் வரத்தான் செய்யும், ஆனால் அந்த கூட்டம் வாக்காக மாறுமா என இதற்கு முன்பு பல தேர்தல்களை நாம் பார்த்துள்ளோம். நடிகரை பார்க்க கூட்டம் வரும், அது ஓட்டாக மாறுமா என்பதை சொல்ல முடியாது. மக்களை ஏமாற்றும் வேலையை காங்கிரஸ்- திமுக கூட்டணி செய்து வருகிறது. இப்போது ஏதோ ஒன்றைச் சொல்லி ஏமாற்றுகின்றனர். காங்கிரஸ் தனது பிழைப்பை பார்க்க வேண்டும், ஜனநாயகன் விவகாரத்தில் தாங்களும் இருக்கிறோம் என்ற இருப்பை காட்டுவதற்கு காங்கிரஸ் இதையும் பேசுவார்கள், இன்னுமும் பேசுவார்கள். இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு வாக்குகளையும் தவிர நடவடிக்கை தேவையில்லை. கொள்கை தான் தேவை அந்த கொள்கையை பிரதமர் மோடி கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் இன்னும் பிற கட்சிகள் சேர வாய்ப்பு இருக்கிறது. எங்கே வெற்றி இருக்கிறதோ அங்கே தான் வந்து சேருவார்கள் நிச்சயமாக இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி இருக்கிறது” என்று தெரிவித்தார்.


