புதிய நபர்களால் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது- வானதி சீனிவாசன்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “வடமாநிலத்தவர் தொடர்பான பிரச்சினையில் முதல்வர் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்து இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. வட மாநிலத் தொழிலாளர்கள் கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிகளவு இருக்கின்றனர். இந்த பிரச்சினையால் டெக்ஸ்டைல் துறையில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த பிரச்சனையை சரியாக கையாளததால் கோவை ,திருப்பூர் மாவட்டங்களில் வேலை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக யார் முயற்சி செய்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வடமாநிலத்தில் இருந்து வருபவர்களும் இந்தியர்கள் தான், அவர்கள் குறித்து அமைச்சர்கள் பேசுவதை வேடிக்கை பார்க்காமல் இந்த விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை காட்ட வேண்டும். ஒவ்வொரு கட்சியிலிருந்து மாற்றுக் கட்சிக்கு செல்வதும், மாற்றுக் கட்சியில் இருந்து இங்கு வருவதும் வழக்கம். பா.ஜ.க ஐ.டி விங் நிர்வாகிகள் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு வெளியே போய் இருக்கின்றனர். அவருக்கு சில அரசியல் காரணம் இருக்கலாம். வெளியில் செல்லும் பொழுது அவர்களின் கருத்துக்களை சொல்வார்கள். இந்த விவகாரத்தை பொருத்தவரை, பாஜகவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. புதிய நபர்களால் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சில நபர்களின் விலகலால் பா.ஜ.கவிற்கு எந்த பாதிப்பும் இல்லை.
திமுக அமைச்சர்கள் ஓட்டு போட்டவர்களை இழிவாக பேசுகின்றனர், இவர்கள் எஜமானர்கள் போலவும் ,ஓட்டு போட்டவர்களை அடிமைகள் போலவும் நடத்துகின்றனர்.
ஓட்டு போடும் மக்களின் சுயமரியாதையை நினைத்து அமைச்சர்கள் பேச வேண்டும். இதற்கு சரியான பதிலை மக்கள் சொல்லுவார்கள்” எனக் கூறினார்.