பாஜக மாநிலங்களுக்கு ஒரு நீதி.. தமிழகத்திற்கு ஒரு நீதியா? மத்திய அரசுக்கு மீண்டும் 'செக்' வைக்கும் தமிழக அரசு!
கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தத் தமிழ்நாடு அரசு தீவிரமாகத் துடித்து வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் கடந்த ஆண்டே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. ஆனால், இந்த இரண்டு நகரங்களிலும் மக்கள் தொகை 20 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டி, மத்திய அரசு இந்தத் திட்டங்களை நிராகரித்து அறிக்கைகளைத் திருப்பி அனுப்பியது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது.
மத்திய அரசின் இந்த நிபந்தனை குறித்துத் தமிழ்நாடு அரசு அப்போதே காட்டமான கேள்விகளை எழுப்பியது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் மட்டும் 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் மெட்ரோ திட்டங்களுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்பது தமிழக அரசின் முக்கிய வாதமாக இருந்தது. மத்திய அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டிய தமிழக அரசு, இத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் அடுத்தகட்டப் பணிகளைத் தொடங்கியது.
இந்நிலையில், 2026-2027ஆம் ஆண்டுக்கான தமிழக இடைக்கால பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இது குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார். நகர்ப்புற போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தவும் இந்தத் திட்டங்கள் மிக அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போது கோவை மற்றும் மதுரை நகரங்களுக்கான திருத்தப்பட்ட புதிய திட்ட ஆய்வு அறிக்கையைத் (Revised DPR) தயாரிக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு வேகப்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை விரைவில் மத்திய அரசின் ஒப்புதலுக்கு மீண்டும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஏற்கனவே கூறியது போல, இத்திட்டங்கள் கைவிடப்படவில்லை என்பதை பட்ஜெட் உரையின் மூலம் நிதியமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

