ரூ.5,000 வழங்கி பெருமை பேசுவதற்கு வெட்கமாக இல்லையா?- ஹெச்.ராஜா

 
h.raja h.raja

ஆட்சி அமைத்த 2021 இல் இருந்து 2023 வரையிலான ₹30,000 மகளிர் தொகையை வழங்காமல் ஏமாற்றியதை மறைக்க, தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் ₹5,000 வழங்கி பெருமை பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக ஹெச்.ராஜா தனது எக்ஸ் தளத்தில், “சொன்னதைச் செய்யாமல் வெற்று பெருமை மட்டும் பேசும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே! ஆட்சி அரியணையில் அமர்ந்ததும் உடனடியாக அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சி அமைத்த 2021 இல் இருந்து 2023 வரையிலான ₹30,000 மகளிர் தொகையை வழங்காமல் ஏமாற்றியதை மறைக்க, தற்போது தேர்தல் தோல்வி பயத்தில் ₹5,000 வழங்கி பெருமை பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? 

அதேபோல, 2021 தேர்தல் வாக்குறுதியில் அரசுத் துறைகளில் 5.50 லட்சம் காலிப்பணியிடங்கள் இளைஞர்களை கொண்டு நிரப்பப்படும் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இதில் பாதியைக் கூட முறையாக நிறைவேற்றாமல், 2026-இல் வெறும் 10,000 பணியிடங்களை நிரப்பியதை பெரும் சாதனையைப் போல பிரம்மாண்ட விழாவாக திமுக அரசு கொண்டாடுவது முறையா? ஐந்தாண்டுகள் முடிந்து திமுகவின் அவல ஆட்சியே முடிவு பெறப் போகிறது! ஆனால், வெற்றுப் பெருமை பேசும் திமுக அரசின் கீழ்த்தரமான பழக்கம் மட்டும் முடிந்தபாடில்லை! எல்லாம் இன்னும் சில நாட்களுக்கு தான்! அணையப் போகும் ஜோதி கொளுந்துவிட்டு எரிவதைப் போல, விளம்பரங்களிலும் வெற்று பெருமை பேசுவதிலும் மும்முரமாக இருக்கும் திமுக அரசு அஸ்தமனமாகும் தினம் தொலைவில் இல்லை!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

Advertisement