உமா கார்க்கி கைது: அழிவை நோக்கி அவசர அவசரமாக செல்லும் திமுக- பாஜக
பாஜகவைச் சேர்ந்த உமா கார்க்கி கைதுக்கு பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை, கோவை காளப்பட்டியில் நேற்று நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில், சிறந்த சமூக ஊடசு செயல்பாட்டிற்காக உமா கார்கி என்ற இளம் பெண்மணி ஒருவருக்கு பாராட்டு தெரிவித்து, சிறந்த செயற்பாட்டாளர் விருது அளித்தார்.
தனது பதிவுகளை நாகரீகமாகவே கையாண்டு வருபவர் என்ற போதிலும், இவரைப் பாராட்டி தலைவர் அண்ணாமலை விருது வழங்கினார் என்ற காரணத்துக்காகவே, காழ்ப்புணர்ச்சியின் பேரில், ஒரு கேவலமான மனநிலையில் இவரை கைது செய்துள்ளது எந்த அளவுக்கு இங்கு கொடூரமான அளவில் ஜனநாயக மரபுகள் மீறப்படுகின்றன என்பதை காட்டுகிறது.
அதுவும் பொது வெளியில் தனது சமூக ஆர்வங்களை புலப்படுத்தி வரும் படித்த இளம் பெண் பட்டதாரியை பெண் என்றும் பார்க்காமல் சைபர் கிரைம் போலீஸ் மூலம் கைது செய்து. காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருவது தமிழகத்தில் மறைமுகமாக அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே நிதி மோசடிகள் செய்ததற்காக அதிமுகவில் இருந்து ஓரம்கட்டப்பட்ட செந்தில் பாலாஜியை, குறுக்கு வழியில் சம்பாதித்து கோடி கோடியாக கொடுப்பார் என்ற அற்ப காரணத்துக்காக திமுக சேர்த்து கொண்டது. திமுக ஒரு ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்து ஊழலில் வாழும் கட்சி என்பதை காட்டுகிறது.
இந்நிலையில் முதல்வரின் நகமும் சதையுமாகவும், திமுகவின் நடமாடும் கருவூலமாகவும் தன்னை நிரூபிக்கும் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத் துறையின் நடவடிக்கைகளை பொறுக்க முடியாத திமுக அரசு கடந்த இரண்டு நாட்களாக பாஜகவின் மாநில நிர்வாகிகள் மீதும், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மீதும் கைது நடவடிக்கையை தொடங்கியது. இந்நிலையில் வெளியில் இருந்து கட்சியை ஆதரிக்கும் பொது மக்கள் மீதும் தனது பாய்ச்சலை காட்டும் வண்ணம் உமா கார்கி மீது எடுத்துள்ள நடவடிக்கை திமுக அழியும் நிலையை நோக்கி வேகமாக செல்கிறது என்பதையே காட்டுவதாக உணர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


