வேலை வாங்கி தருவதாக மோசடி- பாஜக மாவட்ட தலைவர் கைது

 
வேலை வாங்கி தருவதாக மோசடி- பாஜக மாவட்ட தலைவர் கைது

இரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக 9 லட்சம் மோசடி செய்த விருதுநகர் பா.ஜ.க.மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.

பணமோசடி வழக்கில் பாஜக மாவட்ட தலைவர் கைது

சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார் மற்றும் கலையரசன். இதில் சுரேஷ்குமார் விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவராகவும், கலையரசன் மாவட்டச் செயலாளராகவும் உள்ளனர். இவர்கள் இருவரும் சிவகாசி மாநகர பாஜக துணைத் தலைவர் பாண்டியன் என்பவரிடம், அவரது மகன்களான கார்த்திக் என்பவருக்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், முருகதாஸ் என்பவருக்கு தென்னக ரயில்வேயிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி, கடந்த 2017 ம் ஆண்டு ரூபாய் 11 லட்சம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த 5 ஆண்டுகளாக வேலையும் வாங்கி தராமல், வாங்கிய பணத்தை திருப்பி தராமல் இருந்ததால், பாண்டியன் மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்துள்ளார். அதன் பேரில் தலா ரூபாய் 2 லட்சத்திற்கு 5 காசோலைகளும், ரூபாய் ஒரு லட்சத்திற்கு ஒரு காசோலையும், பாண்டியனிடம் கொடுக்கப்பட்ட நிலையில், ரூபாய் 2 லட்சம் ரொக்க பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் திரும்ப பெற்றுள்ளனர். மீதமுள்ள காசோலைகள் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. மீதி 9 லட்சம் ரூபாயை திருப்பி கேட்டும் தராத நிலையில், வங்கி காசோலையும் பணம் இன்றி திரும்பியதால், சுரேஷ்குமார் மற்றும் கலையரசன் மீது பாண்டியன் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கலையரசனை கடந்த 15-12-22 அன்று கைது செய்தனர். சுரேஷ்குமார் உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் கோரி இருந்தார். ரூபாய் 5 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க ஜாமின் செலுத்துமாறு நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. கடந்த மே 12 ம் தேதி அதற்கான காலக்கெடு முடிந்தது. ஆனால் ஜாமீன் தொகை செலுத்தவில்லை. இதனையடுத்து விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார் அவரை இன்று சிவகாசி அருகே திருத்தங்கல்லில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்காக அழைத்துச் சென்ற பின்னர் அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.