அரசு ஊழியர்களிடம் இருந்தோ ஒரு ஓட்டு கூட பாஜக, சிபிஎம், காங்கிரஸ்க்கு கிடைக்காது..!

 
1

கடந்த 2016ம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடந்த ஆசிரியர் நியமனங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி 26 ஆயிரம் பேரின் நியமனத்தை கல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஆசிரியர் வேலைக்காக லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. முன்னாள் கல்வித்துறை அமைச்சர் பார்தா சாட்டர்ஜி, முன்னாள் அதிகாரிகள் உள்பட பலர் இந்த நியமன ஊழல் தொடர்பாக சிறையில் உள்ளனர்.

தற்போது நியமனம் ரத்து செய்யப்பட்டவர்கள் இதுவரை வாங்கிய ஊதியத்தை 12 சதவீத வட்டியோடு திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து மாநிலம் அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கொல்கத்தாவில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. சிலர் செய்த ஊழலுக்காக ஆயிரக்கணக்கான அப்பாவி ஆசிரியர்கள், அவர்களின் குடும்பங்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என போராட்டம் நடத்தியவர்கள் கூறினர்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மம்தா பானர்ஜி, இது பற்றி கூறியிருப்பதாவது: -

பாஜக, சிபிஎம், காங்கிரஸ் என யாருக்கும் ஆசிரியர்களிடம் இருந்தோ, அரசு ஊழியர்களிடம் இருந்தோ ஒரு ஓட்டு கூட கிடைக்காது. அவர்கள் உயர் நீதிமன்றத்தைத் தான் வாங்கி இருக்கிறார்கள், உச்ச நீதிமன்றத்தை அல்ல. உச்ச நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நான் இன்னும் நம்புகிறேன்.

அவர்கள் உயர் நீதிமன்றத்தை வாங்கி விட்டார்கள். சிபிஐ –யை வாங்கி விட்டார்கள். என்ஐஏ-வை வாங்கி விட்டார்கள். பிஎஸ்எப்- ஐ வாங்கி விட்டார்கள். அவர்கள் சி.ஏ.பி.எப்-ஐ வாங்கி விட்டார்கள். தூர்தர்ஷனின் நிறத்தை காவியாக மாற்றிவிட்டார்கள். இனி இது பாஜகவை பற்றியும் மோடியின் உரையைப் பற்றி மட்டுமே பேசும். அதை பார்க்காதீர்கள். புறக்கணிப்பு செய்யுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.