சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி வெற்றி..?

 
1

மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் 19ம் தேதி நடந்தது. ஜூன் 1ம் தேதி வரை இன்னும் 6 கட்டத் தேர்தல் நடக்க வேண்டி உள்ள நிலையில், ஒரு மக்களவைத் தொகுதிக்கான முடிவு தற்போது உறுதியாகி உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பாஜக சார்பில் களம் இறக்கப்பட்டவர் முகேஷ் தலால். இந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் நிலேஷ் கும்பானி வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இவர்களைத் தவிர்த்து 8 பேர் இந்த தொகுதிக்கு போட்டியிட்டனர்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது 3 பரிந்துரையாளர்கள் அஃபிடவிட்டில் நாங்கள் கையெழுத்து இடவில்லை என தெரிவித்தனர். இதையடுத்து மனுவை தேர்தல் அதிகாரிகள் நிராகரித்தார். காங்கிரஸ் கட்சியின் மாற்று வேட்பாளரான சுரேஷ் பட்சாலாவின் மனுவும் இதே காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டது. இந்த தகவலை மாவட்ட தேர்தல் அதிகாரி சவுரப் பர்தி அறிவித்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்களின் பரிந்துரையாளர்களின் உண்மைத் தன்மை பற்றி பாஜகவின் தேர்தல் ஏஜென்ட் தினேஷ் ஜோதானி எழுப்பிய சந்தேகத்தால் இந்த பிரச்சினை உருவானது. இந்நிலையில் சூரத் தொகுதியில் போட்டியிட்ட பிற வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுக்களை திரும்பப்பெற்றுக் கொண்டனர்.

இதனால், பாஜக வேட்பாளரான முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வாகி உள்ளார். இந்த தகவலை மாநில முதல்வர் புபேந்திர படேல் தெரிவித்தார்.

இது குறித்து மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாடில், தனது எக்ஸ் பதிவில் கூறுகையில், “சூரத் மக்களவைத் தொகுதியில் போட்டியின்றி தேர்வாகி உள்ள முகேஷ் தலாலுக்கு வாழ்த்துக்கள்!” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா முழுவதும் பாஜக படைக்கப் போகும் வெற்றி வரலாற்றுக்கு இது தொடக்கம் என்றும் குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளையும் பாஜக வெற்றி கொள்ளும் என நம்பிக்கை தெரிவித்தார்.

போட்டியின்றி தேர்வானதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளுக்கும் மே 7ம் தேதி 3ம் கட்டத் தேர்தலில் வாக்குபதிவு நடக்க உள்ளது.