“எனது மிக முக்கியமான கேள்விக்கு மட்டும் அமைச்சர் அருண்ராஜிடம் பதில் இல்லை”- அண்ணாமலை
சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ்-க்கு 'வீ த லீடர்ஸ்' அமைப்பு நிறுவனர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “தமிழகத்தைச் சேர்ந்த மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்ற விவகாரத்தில், மாணவர்களின் பாதிப்பு குறித்து நாங்கள் குறிப்பிட்ட அதே தகவல்களை, இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களும் கூறியிருக்கிறார். எங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தியதற்கு அவருக்கு நன்றி. மேலும், தமிழக அரசு நீதிமன்றத்தை அணுக உள்ளதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்த விவகாரத்தின் மிக முக்கியமான கேள்விக்கு அமைச்சர் இன்னும் பதிலளிக்கவில்லை. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் தடையில்லாச் சான்றிதழ் (NOC) வழங்கவில்லை என்று கூறியுள்ள நிலையில், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளின்படி 60 நாட்களுக்குள் தேவையான நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? அந்த நிர்வாகத் தவறுக்கு யார் பொறுப்பு? எந்த அலுவலர்கள் அல்லது அதிகாரிகள் தங்களின் கடமையைச் செய்யத் தவறினர்? இது வெறும் அலட்சியமா, அல்லது வேண்டுமென்றே செய்த நிர்வாகப் பிழையா? யாருடைய அழுத்தத்தின் காரணமாக இது நடந்தது?
இந்தக் கேள்விகளுக்கு தமிழக வெற்றிக் கழக அரசு தெளிவான பதிலை வழங்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது மட்டுமே போதாது. இந்த அலட்சியத்தால் மாநில ஒதுக்கீட்டில் 650 மருத்துவ இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கனவுடன் இருக்கும் ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, தவறுக்கு காரணமானவர்கள் யார் என்பதை வெளிப்படையாகக் கண்டறிந்து, அவர்கள் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை பாதித்த இந்த விவகாரத்தை, தவறுக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கடந்து செல்ல முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

