திமுக, காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதற்கு இதுவே சாட்சி- அண்ணாமலை

 
Annamalai

தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்து கொண்டு வரப்பட்டதால் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவும் தோல்வி அடைந்த நிலையில்,திமுக, காங்கிரஸ் பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதற்கு இதுவே சாட்சி என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “மக்களவையில், பெண்களுக்கு அரசியல் உரிமை வழங்கும் பெண்கள் ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறாமல், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்த்து வாக்களித்திருக்கின்றன. சுமார் 30 ஆண்டுகளாக, பெண்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தில் இட ஒதுக்கீடு வழங்கும் முயற்சி, தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகளால் தடைபட்டு வருகின்றன. கடந்த 2010 ஆம் ஆண்டும், தங்கள் ஆட்சிக் காலத்தில், இந்த மசோதாவை தாக்கல் செய்யாமல் துரோகம் செய்தது காங்கிரஸ் திமுக கூட்டணி. தற்போது, மீண்டும் ஒரு முறை, இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்து, நாடு முழுவதும் உள்ள மகளிருக்குத் துரோகம் இழைத்திருக்கின்றன. பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தடுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள், பெண்களுக்கு எதிரான கட்சிகள் என்பதற்கு இதுவே சாட்சி.” எனக் குறிப்பிட்டுள்ளார்.