2 ஆண்டுகளுக்கு முன் ரூ.59 லட்சம் நிதி ஒதுக்கீடு! ஆனால் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை- அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

தமிழகம் முழுவதும் உள்ள சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களைக் கணக்கெடுத்து, அவை அனைத்திற்கும் சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கடந்தும், தமிழகத்தின் பல மலைக் கிராமங்கள், சாலை வசதி இன்றி இருக்கின்றன. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஈசல்திட்டு மலைக் கிராமத்தில், சாலை வசதி இல்லாததால், மணியன் என்ற இறந்தவர் உடலை, கரடுமுரடான மலைப் பகுதியில், தொட்டில் கட்டித் தூக்கிச் செல்லும் காணொளி, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.  உடுமலைப்பேட்டை பகுதியில், பல மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் வசிக்கும் பல ஆயிரம் பழங்குடியின மக்களுக்கு, அடிப்படை வசதிகள் கூட இதுவரை செய்து தரப்படவில்லை. இதுவரை இவர்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை. பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், போராடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ரூ. 59 லட்சம் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்னும் சாலை அமைக்கப்படவில்லை என்பது, தமிழக அரசின் அவலநிலைக்குச் சான்று.


மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்துக்கு, சுமார் ரூ.6,000 கோடி வரை தமிழகத்துக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, இந்தத் திட்டத்துக்கு, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று பெயர் மாற்றி, பல ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாகத் திமுக அரசு தெரிவித்தது. எங்கே சென்றது இந்த நிதி எல்லாம்? தமிழக மலைக் கிராமங்களில் இன்னும் சாலைகள் அமைக்காமல், தொடர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. திருப்பூர், கோவை, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாநகரங்களைச் சுற்றியிருக்கும் மலைக் கிராமங்களில் கூட சாலைகள் அமைக்கப்படாமல் இருக்கின்றன. தமிழகத்தில் வசிக்கும் பழங்குடி மக்கள், மிகவும் அவலநிலையில் வசித்து வருகிறார்கள். உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள சாலை வசதி இல்லாத மலைக் கிராமங்களைக் கணக்கெடுத்து, அவை அனைத்திற்கும் சாலைகள் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.