மத்திய அரசிடமிருந்து ரூ.5,886 பெற்றுக்கொண்ட திமுக அரசு சாலைகள் அமைக்கப்படவில்லை- அண்ணாமலை

 
annamalai mkstalin annamalai mkstalin

தமிழகக் கிராமங்களுக்குச் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை விட உங்கள் விளம்பர நாடகங்கள் முக்கியமா? என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Annamalai

இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், “நாகப்பட்டினம் மாவட்டம், ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல், பொதுமக்கள் வயல் வரப்பு ஒற்றையடிப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் தொடங்கி, மருத்துவ அவசரச் சிகிச்சைக்குச் செல்லும் மக்கள் வரை, இந்த ஒற்றையடிப் பாதையையே பயன்படுத்த வேண்டியிருக்கிறது. மழைக்காலங்களில், பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகள் தாக்குதலுக்கும் பொதுமக்கள் உள்ளாக நேர்கிறது. 

மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், இதுவரை தமிழகம் ₹5,886 கோடி நிதியைப் பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், கிராமங்களில் சாலைகள் அமைக்கப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுத் திட்டத்தின் பெயரை மட்டும் மாற்றி, முதல்வரின் கிராம சாலைகள் திட்டம் என்று வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டார்கள். இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் எந்தெந்த கிராமங்களில் சாலைகள் அமைக்கப்பட்டன என்பது குறித்து தமிழக பாஜக சார்பாக வெள்ளை அறிக்கை கேட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே? 


முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவல நிலையே சாட்சி. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, தினந்தோறும் ஒரு நாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் எப்போது நிறுத்தப் போகிறார்? தமிழகக் கிராமங்களுக்குச் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுப்பதை விட முக்கியமா உங்கள் விளம்பர நாடகங்கள்? உங்கள் வேஷங்களை தமிழக மக்கள் விரைவில் கலைப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.